

சிரியாவின் ஜப்லே நகரில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 43 பேர் பலியாகியுள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று சிரியாவில் அரசப் படைகள் வலுவாகத் திகழ்ந்த இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தீவிரவாதத் தாக்குதல்களில் மொத்தம் 154 பேர் பலியானதாக சமூக ஆர்வல அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ஜப்லே தேசிய மருத்துவமனையில் வெடிகுண்டுத் தாக்குதலில் பலியானவர்களில் நோயாளிகள், இவர்களைப் பார்க்க வந்த உறவினர்கள், வருகையாளர்கள், 3 மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களும் அடங்குவர்.
கொடுமை என்னவெனில் மற்ற இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் காயமடைந்தோர் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் மருத்துவமனையே கடும் தாக்குதலுக்கு உள்ளானதில் அம்மருத்துவமனை செயல்படமுடியாத நிலைக்குச் சென்றுள்ளது.
இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தொடர் கொலைவெறித் தாக்குதலில் 80 பேர் பலியானதாக சிரிய அரசு தெரிவித்துள்ளது.
இப்பகுதிகள் இதுவரை ஐஎஸ் தாக்குதலுக்கு ஆட்படாத பகுதிகளாகும், இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் சற்றே சுணக்கம் ஏற்பட அந்த வாய்ப்பை ஐ.எஸ். பயன்படுத்திக் கொண்டது.
அதேபோல் சுமார் 7 லட்சம் அகதிகளில் பெரும்பாலும் சன்னி பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் வசிக்கும் டார்டஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அல்-கர்னாக் என்ற முகாம் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
2011-ம் ஆண்டு அசாத் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற எழுச்சி முழு அளவிலான சிவில் யுத்தமாக மாறியது. இதனால் விளைந்த குழப்பத்தைப் பயன்படுத்தி அல்கய்தா அமைப்பு அங்கு வேரூன்றியது குறிப்பிடத்தக்கது.