Published : 30 May 2016 07:36 AM
Last Updated : 30 May 2016 07:36 AM

டெல்லியை 5 நிமிடத்தில் தாக்க முடியும்: பாகிஸ்தான் அணு விஞ்ஞானி தகவல்

ஐந்து நிமிடங்களில் டெல்லியை தாக்கும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது என்று அந்த நாட்டு அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் அணுசக்தி துறை தந்தை என்றழைக்கப்படும் அவர் இஸ்லாமாபாத்தில் நடந்த விழாவில் பேசியதாவது:

கடந்த 1998-ல் முதல் அணு குண்டு சோதனையை பாகிஸ்தான் நடத்தியது. அதற்கு முன்பு 1984-ம் ஆண்டிலேயே அணுகுண்டு சோதனை நடத்த திட்டமிட்டோம். ஆனால் சர்வதேச பொருளாதார தடை அச்சத்தால் அன்றைய ராணுவ தளபதி ஜியா உல் ஹக் திட்டத்தை தடுத்துவிட்டார்.

ராவல் பிண்டி அருகேயுள்ள கதுவா தளத்தில் இருந்து 5 நிமிடங்களில் ஏவுகணை மூலம் டெல்லியை தாக்கும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கதுவா நகரில் யுரேனியத்தை செறிவூட்டும் ஆராய்ச்சி மையம் உள்ளது. அங்குதான் அணுகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா கடும் கண்டனம்

ஏ.கியூ.கானின் சர்ச்சை கருத்து குறித்து இந்திய ராணுவ முன்னாள் தளபதி என்.சி. விஜ் கூறியதாவது: ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் தாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால் அதுகுறித்து இந்தியத் தரப்பில் யாரும் பேசுவது இல்லை. ஏ.கியூ. கானின் பேச்சு அர்த்தமற்றது என்று தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற இந்திய ராணுவ பிரிகேடியர் குர்மித் கன்வால் கூறும் போது, ‘இலக்கை தாக்குவதற்கு அணு ஆயுதங்களை தயார் செய்வதற்கே குறைந்தது 6 மணி நேரம் ஆகும். பாகிஸ்தான் விஞ்ஞானி விவரம் தெரியாமல் உளறுகிறார் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x