

இஸ்லாமாபாத்: பாஜக பிரதிநிதிகள் முகமது நபிகளுக்கு எதிராக தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.
பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஆகியோர் முகமது நபிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். அது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகள் இதற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளன. அந்த வரிசையில் பாகிஸ்தான் இப்போது இணைந்துள்ளது. அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
முகமது நபிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த கட்சி பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது பாஜக என்பதும் குறிப்பிடத்தக்கது.
"நமது முகமது நபிகள் குறித்து பாஜக பிரதிநிதி தெரிவித்துள்ள புண்படுத்தும் விதமான கருத்துக்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் மத சுதந்திரம் நசுக்கப்பட்டுள்ளது மற்றும் இஸ்லாமியர்களை துன்புறுத்தி வருவதை தான் இது மீண்டும் ஒருமுறை சொல்லி உள்ளது. உலக நாடுகள் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த போக்கை வன்மையாக கண்டிக்க வேண்டும்.
அளவு கடந்த அன்பை நாம் எல்லோரும் முகமது நபி மீது வைத்துள்ளோம். இஸ்லாமியர்கள் அனைவரும் அவர் மீது வைத்துள்ள அன்புக்காகவும், மரியாதைக்காகவும் உயிரையே தியாகம் செய்வார்கள்" என தெரிவித்துள்ளார் ஷெபாஸ் ஷெரீப்.