

உக்ரைன் ராணுவத்தின் சரக்கு விமானத்தை ரஷ்ய ஆதரவுப் படையினர் சனிக்கிழமை சுட்டு வீழ்த்தினர். இதில் அந்த விமானத்தில் இருந்த 49 வீரர்கள் உயிரிழந்தனர்.
உக்ரைனின் கிழக்குப் பகுதி யில் ரஷ்யர்கள் பெரும் பான்மையாக வசிக்கிறார்கள். கிழக்குப் பகுதியின் பெரும்பாலான நகரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்தப் பகுதிகளில் ரஷ்ய ஆதரவு படைகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே சில மாதங்களாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை காலையில் 40 வீரர்கள், 9 குழுவினருடன் உக்ரைன் ராணுவ சரக்கு விமானம் கிழக்குப் பகுதியின் லுகான்ஸ்க் நகரில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தை ரஷ்ய ஆதரவுப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதில் விமானத்தில் இருந்த 49 பேரும் உயிரிழந்தனர்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டைகளில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தால் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.