Published : 03 Jun 2022 07:33 AM
Last Updated : 03 Jun 2022 07:33 AM

100-வது நாளை எட்டியது ரஷ்ய தாக்குதல்: உக்ரைனிலிருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 100 நாட்கள் எட்டிய நிலையில், உக்ரைனிலிருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறிவிட்டனர்.

நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாடு மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தாக்குலை தொடங்கியது. தற்போது இந்த போர் 100 நாட்களை எட்டியுள்ளது.

உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் சீர்குலைந்து ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் சென்று விட்டது. ரஷ்ய தாக்குதல் தொடங்கியதில் இருந்தே, அந்நாட்டு மக்கள் பாதுகாப்பு தேடி அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்தனர். பெரும்பாலான மக்கள் போலந்து நாட்டுக்கு சென்றுள்ளனர். இது தவிர ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.

போலந்து நாட்டில் மட்டும் 36 லட்சம் பேர் குடியேறியுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டின் மக்கள் தொகை கடந்த 3 மாதங்களில் 10% அதிகரித்துவிட்டது.

ரஷ்யா தாக்குதல் காரணமாக உக்ரைனிலிருந்து மொத்தம் 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு உக்ரைன் மக்கள் தொகை 4 கோடியே 30 லட்சமாக இருந்தது. தற்போது 3 கோடியே 70 லட்சமாக குறைந்துள்ளது. இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டதிலிருந்து, ஐரோப்பா கண்ட மிகப்பெரிய அகதிகள் பிரச்சினை இதுதான்.

உக்ரைன் நாட்டுக்குள் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து சுமார் 80 லட்சம் பேர், பிற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். உக்ரைனில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வினாடியும், ஒரு குழந்தை போர் அகதியாக மாறிக் கொண்டிருக்கிறது. ரஷ்யா வேறுவிதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. தாக்குதல் நடத்தியது முதல் தற்போது வரை ரஷ்யா மீது உலக நாடுகள் 5,831 தடைகளை விதித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x