உலக மசாலா: வல்லவருக்கு மூங்கிலும் படகு!

உலக மசாலா: வல்லவருக்கு மூங்கிலும் படகு!
Updated on
1 min read

சீனாவில் வசிக்கும் 51 வயது ஃபாங் ஷுயுன், 23 அடி மூங்கில் கம்பு ஒன்றில் நின்றுகொண்டு, இன்னொரு கம்பு மூலம் துடுப்பு போட்டபடி ஃபுச்சுன் ஆற்றைக் கடக்கிறார். ‘‘2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை முடிந்து வீடு திரும்பும்போது தாமதமாகிவிட்டது. கடைசிப் படகையும் பிடிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று கரையில் நின்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு மூங்கில் கம்பு ஆற்றில் மிதந்து வந்தது. அதில் ஏறி நின்று, அக்கரையை அடைந்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.

பல முயற்சிகள் தோல்வியைச் சந்தித்தன. கடைசியில் என் உடலைச் சமநிலைப்படுத்த வேண்டும் என்று புரிந்துகொண்டேன். பிறகு கையில் ஒரு கம்புடன் மூங்கில் கம்பில் ஏறி நின்றேன். சில முயற்சிகளில் வெற்றி கிடைத்துவிட்டது. அச்சமின்றி, நம்பிக்கையோடு பயணத்தை மேற்கொண்டேன். பத்திரமாகக் கரையை அடைந்தேன். அன்று முதல் இன்று வரை படகில் பயணிப்பதையே விட்டுவிட்டேன். மூங்கில் கம்புகள் மூலமே ஆற்றைக் கடக்கிறேன்’’ என்கிறார் ஃபாங் ஷுயுன்.

வல்லவருக்கு மூங்கிலும் படகு!

வட அமெரிக்காவில் காணப்படும் செடிகளில் ஒன்று போலிஸ்மா சொனோரே. மணல் மேடுகளில் இவை வளர்கின்றன. இவற்றால் தானாக உணவு தயாரித்துக்கொள்ள இயலாது. அதனால் மற்ற பாலைவனத் தாவரங்களின் வேர்களில் இருந்து உணவைப் பெற்றுக்கொள்கின்றன. நிலத்திலிருந்து 2 மீட்டர் தூரத்துக்குக் கீழே தண்டு செல்கிறது. அங்கிருக்கும் வேர்கள் அருகில் உள்ள தாவரங்களின் வேர்களோடு இணைந்துகொள்கின்றன. உணவு, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் ஆகியவற்றை பக்கத்து செடிகளில் இருந்து எடுத்துக்கொள்கிறது. நிலத்துக்கு மேலே தண்டுகள் கிளைகள் பரப்பி இருக்கும். இவற்றில் மணல் பந்து வடிவில் திரண்டிருக்கும். வசந்த காலத்தில் மணல் பந்துக்கு மேலே இளஞ்சிவப்பு நிறத்தில் சிறிய பூக்கள் பூக்கின்றன. தூரத்தில் இருந்து பார்த்தால் செடி குடை பிடித்தபடி நின்றுகொண்டிருப்பது போலத் தோன்றும்.

விநோத தாவரம்!

சீனாவில் 8 பெண்கள் இணைந்து ஹெச்ஐவி, எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். நடுத்தர வயது கொண்ட இந்தப் பெண்கள், கடந்த 20 ஆண்டுகளாக கூந்தலை வெட்டாமல் வளர்த்து வருகின்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் 3.5 மீட்டர் நீள கூந்தல் இருக்கிறது. உலகிலேயே மிக நீளமான கூந்தல்களைப் பெற்ற 8 பேர் கொண்ட குழு இதுதான்.

“பழங்காலத்தில் சீனப் பெண்கள் நீண்ட கூந்தலுடன் இருந்திருக்கிறார்கள். காலப்போக்கில் அது மறைந்துவிட்டது. நீண்ட கரிய கூந்தல்தான் உடல் ஆரோக்கியத்தின் கண்ணாடி. எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது, உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் எடுத்துரைக்கிறோம். நாங்கள் ஆரோக்கியமாக இருப்பதால்தான் இவ்வளவு நீண்ட, கரிய கூந்தல் இருக்கிறது என்பதை உதாரணமாகக் காட்டுகிறோம். எங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான வரவேற்பு இருக்கிறது” என்கிறார் ஆக்ட் அமைப்பின் உறுப்பினர்களில் ஒரு பெண்.

கூந்தலை பராமரிப்பதே பெரிய வேலையா இருக்குமே!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in