நேபாள விமான விபத்து | கருப்புப் பெட்டி கண்டெடுப்பு; 22 சடலங்களும் மீட்பு

விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள்
விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள்
Updated on
1 min read

காத்மாண்டு: விபத்தில் சிக்கிய நேபாள விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்துவிட்டனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் விபத்துப் பகுதியில் இருந்து 22 பயணிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் விமானத்தின் கருப்புப் பெட்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை நேபாள ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

நேபாள நாட்டில் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஞாயிறு (மே 29) காலை நேபாளத்தின் பொக்காரோ விமான நிலையத்திலிருந்து சிறிய ரக 9 என்ஏஇடி விமானம் 22 பயணிகளுடன் ஜோம்சோம் நகருக்கு கிளம்பியது இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாளிகள், 3 நேபாள ஊழியர்கள் என 22 பேர் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் ரேடார் பார்வையில் இருந்து மறைந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தீவிர தேடுதலுக்குப் பின்னர் விமானம் இமயமலை தவளகிரி சிகரம் அருகே பனிபடர்ந்த மலையடிவாரப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டம் கோவாங் கிராமத்திலுள்ள மலையில் மோதி லாம்சே ஆற்று முகத்துவாரத்தில் விமானம் விழுந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று காலை மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கின. விமானத்தின் பாகங்கள், பயணிகளின் உடல்கள், அவர்களின் உடைமைகள் உள்ளிட்டவற்றை மீட்புப் படை வீரர்கள் சேகரித்தனர்.

விபத்தில் பலியான இந்திய குடும்பம்: விமானத்தில் பயணம் செய்து இறந்த 22 பேர் அடங்கிய பட்டியலை நேபாள அரசு வெளியிட்டுள்ளது. இதில் 4 இந்தியர்களும் அடங்குவர். அவர்கள் மகாராஷ்டிர மாநிலம் புணேவை சேர்ந்த அசோக் குமார் திரிபாதி, அவரது மனைவி வைபவி பண்டேகர், மகன் தனுஷ், மகள் ரித்திகா ஆகியோர் என தெரியவந்துள்ளது. இவர்கள் நேபாள நாட்டிலுள்ள கோயில்களை தரிசிக்க சென்ற நிலையில் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in