

டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டேயில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று அரசியல்வாதிகள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களை பாதுகாப்பதற்கு, ஆசிரியர்களின் கைகளில் துப்பாக்கிகளை ஒப்படைப்பது குறித்து ஒரிகான் பல்கலைகழக பேராசிரியர்களான ஐமி ஹஃப் மற்றும் மைக்கேல் பார்ன்ஹார்ட் ஆகிய இருவரும் பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். பெரும் விவாதத்துக்குரிய இந்த விவகாரம் தொடர்பான ஆய்வின் முடிவுகள் இதோ...
1. ஆசிரியர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதங்களைப் பாதுகாப்புக்காக வைத்திருப்பதை பொதுமக்கள் எப்படி பார்க்கிறார்கள்?
2021-ஆம் நடத்திய புள்ளி விவரத்தின்படி, 43% அமெரிக்கர்கள், ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்திருப்பதை ஆதரிக்கின்றனர். ஆனால், இந்த ஆதரவு பெரும்பாலும் துப்பாக்கி விற்பனை செய்பவர்கள், குடியரசுக் கட்சியை சேர்த்தவர்களிடம் இருந்துதான் வந்துள்ளது. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆசிரியர்களிடம் ஆயுதங்களை கொடுப்பது என்பது பள்ளிகளில் ஆபத்தை அதிகரிக்கும் என்று அமெரிக்க தேசிய கல்வி அமைப்பும் தெரிவித்துள்ளது.
எங்களது ஆய்வில் இரு வேறுபட்ட கருத்துகள் மக்களிடமிருந்து வந்ததுள்ளது. சிலர் ஆசிரியர்கள் ஆயுதங்கள் ஏந்துவதை ஆதரித்தனர். வேறு சிலரோ மாறாக பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஏனெனில், நன்கு பயிற்சி பெற்ற அதிகாரிகளே சில நேரங்களில் இலக்கை தவற விடுகின்றனர் என பல எடுத்துகாட்டுகள் கூறப்படுகின்றன.
2. ஆசியர்களிடம் ஆயுதங்களை வழங்கும்போது எம்மாதிரியான பின்டைவுகள் ஏற்படுகின்றன?
ஆசிரியர்களிடம் துப்பாக்கி வழங்கப்பட்டால் சில நேரங்களில் அவர்கள் தற்செயலாக தங்களையோ, பிற ஆசிரியர்களையோ, மாணவர்களையோ தாக்கலாம் . இது தார்மிக ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் தவறுதலாக துப்பாக்கிகளை ஆசிரியர்கள் வேறு இடத்தில் வைத்தால் அது மாணவர்களிடமும் போகலாம். இதுவும் ஆபத்தை ஏற்படுத்தும்.
மேலும், பள்ளிகளில் துப்பாக்கியை அனுமதிப்பது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தலாம். மாணவர்களிடமும் இதற்கு போதிய ஆதரவு இல்லை. குறிப்பாக கருப்பின மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
3. ஏன் ஆசிரியர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்?
அமெரிக்கர்களுக்கு தங்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு ஆயுதம் ஏந்த உரிமை உண்டு. எனவே ஆசிரியர்களுக்கு தங்களையும், மாணவர்களையும் பாதுகாத்து கொள்ள உரிமை உண்டு என்று ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள். ஆயுதங்களை கொண்டிருப்பதன் மூலம் தங்கள் குழந்தைகளை ஆசிரியர்கள் பார்த்து கொள்வார்கள் என்று சில பெற்றோர்கள் கருதுகின்றனர். அதாவது, பள்ளியின் பாதுகாப்பு அதிகாரி குற்றவாளியை பார்க்கும் முன்னே ஆசிரியர் குற்றவாளியை பார்த்துவிட்டால் அவர் துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காக்கலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
4. ஏதேனும் மாகாணங்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆயுதங்களை வைத்திருப்பதை அனுமதிக்கிறதா?
அமெரிக்காவில் 19 மாகாணங்களில் சில மாகாணங்களில் ஆசிரியர்கள் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதி வழங்கப்படுகிறது. 1999-ஆம் ஆண்டு கொலம்பியன் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு சில மாகாணங்களில் ஆசியர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டது.
5. ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்திருப்பதால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ன?
இது தொடர்பாக நிறைய நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்திருப்பதனால் பள்ளியில் பாதுகாப்பு அதிகரித்துள்ளதா என்பதை எங்களால் இந்த ஆய்வின் மூலம் உறுதியாக கூற முடியவில்லை. மாறாக, ஆசிரியர்களுக்கு ஆயுதம் கொடுப்பதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒரு போலியான பாதுகாப்புத் தன்மையை உணரக் கூடும்.
முன்னதாக, அமெரிக்காவில் ஆயுத கலாசாரத்திற்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
கட்டுரை உறுதுணை: THE CONVERSATION