Published : 29 May 2022 05:05 AM
Last Updated : 29 May 2022 05:05 AM

சுதந்திரத்துக்கு முன்பிருந்தே பாகிஸ்தானில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் நடத்தும் மாரியம்மன் கோயில் திருவிழா

பாகிஸ்தான் கராச்சி பகுதியில் உள்ள கோரங்கி நகரில் தமிழர்கள் சார்பில் நடத்தப்படும் மாரியம்மன் கோயில் கரக உற்சவம்.

சென்னை: பாகிஸ்தான் கராச்சியில் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் இந்து குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசு பாதுகாப்புடன் ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழாக்களையும் அவர்கள் நடத்தி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் ஒன்றுக்கொன்று எதிரி நாடுகளாக பார்த்து வருகின்றன. காஷ்மீர் எல்லையில் நிலவும் தீவிரவாத தாக்குதல்கள் உலக நாடுகளையே அச்சத்துக்கு உள்ளாக்கி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவதை இந்திய ராணுவம் தொடர்ந்து தடுத்து வருகிறது. இதில் ஏராளமான பாகிஸ்தான் தீவிரவாதிகளும், இந்திய ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக இயங்கி வரும் நிலையில், அங்கு சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் இந்துக்கள் வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அங்கு ஆண்டுதோறும், அரசு பாதுகாப்புடன் அச்சமின்றி மாரியம்மன் கோயில் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். வரும் 12-ம் தேதி அக்கோயிலுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக 'அனைத்து கராச்சி மெட்ராஸ் இந்து பஞ்சாயத்' அமைப்பின் பொருளாளர் சஞ்சீவ் பெருமாள் இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறியதாவது:

எனது பூர்வீகம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் உள்ள கீழ்கவரப்பட்டு. இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்பே எனது தாத்தா, கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கள்ளக்குறிச்சியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பாகிஸ்தான் நாட்டில், கராச்சியில் உள்ள கோரங்கி நகரமைப்பு பகுதிக்கு வந்துள்ளனர். அங்கேயே குடும்பத்துடன் வாழத் தொடங்கினர். கடலூர் வெகுதூரம் இருப்பதால் உறவினர்களை பார்க்க யாரும் செல்வதில்லை. இப்போது தொடர்பே இல்லாமல் இருக்கிறது.

கராச்சியில் இப்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர். இங்கு முதல் தலைமுறை தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் எழுத, படிக்கத் தெரியும். அதன் பிறகு வந்த தலைமுறையினருக்கு பேச மட்டுமே தெரியும். எனது அப்பா, அம்மா நாங்கள் தமிழில் பேசவில்லை என்றால், எங்களுக்கு உணவே அளிக்க மாட்டார்கள். அப்படி கண்டிப்புடன் தமிழை வளர்த்தனர். இப்போது 4-வது தலைமுறை உருவாகி இருக்கிறது. இவர்களில் பலருக்கு தமிழில் பேசவே தெரியாது. தற்போது சுமார் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே தமிழ் பேசத் தெரியும். கடந்த 3 தலைமுறையினர் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில்தான் பெயர் வைத்தனர். 4-ம் தலைமுறையினர், வட இந்திய பெயர்களையே சூட்டுகின்றனர்.

பாகிஸ்தானில் உருது, ஆங்கிலம் ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன. தமிழ் படித்தால் கல்வி, வேலைவாய்ப்புக்கு எந்த வகையிலும் உதவாது. ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்ற மனநிலை இன்றைய தலைமுறையினருக்கு இருக்கிறது. தமிழ் என்பது நமது அடையாளம். அது அழிந்துவிடக்கூடாது. தற்போது தமிழ் கற்பிக்கும் வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டு வருகிறோம்.

நாங்கள் அனைவரும் பாகிஸ்தானில் இந்துக்களாகவே வாழ்கிறோம். அந்நாட்டு அரசும் அதை அனுமதிக்கிறது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலை, கராச்சியில் எழுப்பி இருக்கிறோம். அதில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா, கரகம் எடுக்கும் திருவிழா போன்ற திருவிழாக்களை கடா வெட்டி கொண்டாடி வருகிறோம். பாகிஸ்தான் அரசும் எங்கள் விழாக்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குகிறது. இந்த கோயிலை தற்போது புனரமைத்திருக்கிறோம். இக்கோயில் கும்பாபிஷேக விழா ஜூன் 12-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுபோன்ற விழாவை ஒருங்கிணைத்து நடத்துவதற்காக ‘அனைத்து கராச்சி மெட்ராஸ் இந்து பஞ்சாயத்' என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். இதன் பொருளாளராக நான் இருக்கிறேன். இங்குள்ள முஸ்லிம்களும் எங்களுடன் சகோதரத்துவத்துடன் பழகுகின்றனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் வந்ததில்லை. நாங்கள் சிறுபான்மையினர் என்ற உணர்வே ஏற்பட்டதில்லை.

எங்களுக்கு தமிழகத்தில் உள்ளஎங்கள் பூர்வீக கிராமத்தையும், சுற்றுலாத் தலங்களையும் பார்வையிட விருப்பம் இருக்கிறது. தமிழகம் வர விசா கொடுக்க வேண்டும். நாங்கள் தமிழ் கற்க தமிழக அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக தமிழக அரசின் புலம்பெயர்ந்த தமிழர் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸிடம் கேட்டபோது, “அவர்கள் எங்கள் துறையை அணுகினால், சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய உதவிகள் செய்து தரப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x