Published : 29 May 2022 03:11 PM
Last Updated : 29 May 2022 03:11 PM

உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது - ஜெர்மனி, பிரான்ஸுக்கு புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்று ஜெர்மனி, பிரான்ஸுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்று எச்சரிக்கிறோம். இதனால் நிலைமை மோசமாகும். மனிதாபிமான பிரச்சினைகள் அதிகரிக்கும். ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாகவே சர்வதேச அளவில் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

தடைகளை நீக்கினால் ரஷ்யாவில் இருந்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய தயாராக இருக்கிறோம். உக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக உணவு தானியங்களை அனுப்பவும் அனுமதிப்போம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிமானை கைப்பற்றிய ரஷ்யா

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள லிமான் நகரம் தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் கூறுகையில், “லிமான் நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிவிட்டது. ஸ்லோவியான்ஸ்க் நகரை நோக்கி ரஷ்ய படைகளை முன்னேறுவதை உக்ரைன் ராணுவத்தினர் தடுத்துவருகின்றனர்” என தெரிவித்துள்ளது. தற்போது உக்ரைனின் பக்முத் மற்றும் சோலேதார் ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. 5 நிலைகளையும், ஆயுத கிடங்குகளையும் ரஷ்யா அழித்துவிட்டது. உக்ரைனின் டான்பாஸ் பகுதி மீது ரஷ்ய படைகள், தற்போது முழு கவனம் செலுத்திவருகின்றன.

ரஷ்ய ஏவுகணை சோதனை

ரஷ்யாவின் பரென்டா கடல் பகுதியில் இருந்து ஜிர்கான் என்ற ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை 1,016 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x