

வாஷிங்டன்: அமெரிக்க பத்திரிகைகளில் முஸ்லிம்கள் எதிர்மறையாகவே சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது அரசியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
"ரஷ்யா - உக்ரைன் போர்ச் சூழலால் அமெரிக்காவில் உக்ரைனிய அகதிகள் வந்தபோது அளிக்கப்பட்ட வரவேற்புகளுக்கும், 2010-ஆம் ஆண்டு சிரிய போரின்போது வந்த முஸ்லிம் அகதிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்புகளுக்கும் இடையே அவ்வளவு முரண்கள் இருந்தன. சிரியா நாட்டைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நிறைய பாகுபாட்டை எதிர் கொண்டனர். மாறாக உக்ரைன் அகதிகள் பாகுபாடுகளுக்கு உள்ளாகவில்லை. ஏனெனில், உக்ரைன் அகதிகள் கிறிஸ்தவ பாரம்பரியத்தை கொண்டவர்கள்” என்று சமீபத்திய நேர்காணலில் சுட்டிக் காட்டுகிறார் அரசியல் நிபுணர் டேவிட் லைடின்.
அமெரிக்காவில் உள்ள பத்திரிகைகளில் முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்மறையாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து அங்குள்ள அரசியல் நிபுணர்கள் தொடர் ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளார்கள்.
அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை தோன்ற ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. 2007-ஆம் ஆண்டு பியூ ஆராய்ச்சி மையம் அமெரிக்கர்களிடம் நடத்திய ஆய்வில், முஸ்லிம்கள் மீதான மக்களின் எதிர்மறையான கருத்துக்கள் பெரும்பாலும் ஊடகங்களில் அவர்கள் படித்தது, கேட்டவை மூலமாகவே உருவாகியதாக தெரிவித்துள்ளன.
ஊடகங்கள் மூலம் அமெரிக்க முஸ்லிம்கள் மீது உருவாகும் எதிர்மறை கருத்துகள், ஊடகங்கள் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகளுக்கு இடையேயான தொடர்பை தகவல் தொடர்பு அறிஞரான சலீம் மற்றும் அவரது குழுக்கள் நிரூபித்துள்ளன. முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் பற்றிய ஊடக சித்தரிப்புகளின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள, “Covering Muslims: American Newspapers in Comparative Perspective” என்ற புத்தகத்தில் பல கட்டுரைகளையும் தொகுத்துள்ளனர். இதற்காக நூற்றுக்கணக்கான கட்டுரைகளை இவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
அமெரிக்கா மட்டுமல்ல... - முஸ்லிம்கள் மீதான பொய்யான கருத்துகள் அமெரிக்காவில் மட்டுமல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளிலும் பத்திரிகைகள் மூலம் பரப்பப்பட்டுள்ளன. 2000 முதல் 2015 வரை தகவல் தொடர்பு அறிஞர்களாக சைஃபுதின் அஹ்மத் மற்றும் ஜோர்க் மத்தேஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவில், முஸ்லிம்கள் ஊடகங்களில் எதிர்மறையாகக் கட்டமைக்கப்பட்டதையும், இஸ்லாம் ஒரு வன்முறை மதமாக அடிக்கடி காட்டப்படுவதையும் அவர்கள் நடத்திய ஆய்வில் நிரூபித்தனர். மேற்கண்ட ஆய்வுகளின் முடிவில் ஆய்வாளர்கள் முன் இரண்டு கேள்விகள் எழுந்தன.
முதலாவது கேள்வி: முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் பற்றிய கட்டுரைகள் சராசரி செய்தித்தாள்களில் வரும் கட்டுரைகளை விட எதிர்மறையான கருத்துகளுடன் உள்ளதா? இரண்டாவது கேள்வி: மற்ற சிறுபான்மை மதங்களை பற்றிய கட்டுரைகளை விட, முஸ்லிம்களைப் பற்றிய கட்டுரைகளில் ஊடகச் சித்தரிப்புகள் மிகுந்த எதிர்மறையானவையாக உள்ளதா?
நாங்கள் என்ன கண்டறிந்தோம்? - 1996 முதல் 2016 வரை அமெரிக்காவில் வந்த அனைத்துக் கட்டுரைகளை ஆய்வு செய்து சுமார் 2,56,963 கட்டுரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வில் நாங்கள் முஸ்லிம் மதம் சார்ந்து மட்டுமல்ல இந்து, யூதம், கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் சார்ந்து எதிர்மறையாக வந்த கட்டுரைகளையும் கண்டறிந்தோம்.
எங்கள் ஆய்வில் 80% கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தைக் கொண்டதாக இருந்தன. முஸ்லிம்களுக்கு அடுத்து இந்து மதம் சார்ந்து 52%, யூத மதம் சார்ந்து 49%, கத்தோலிக்க மதம் சார்ந்து 45% கருத்துகளும் பத்திரிகைகளில் இடம்பெற்றதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த வேறுபாடு எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலம் ஊடகங்கள் மற்ற சிறுபான்மை மதங்களைப் பற்றி எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதைக் காட்டிலும் முஸ்லிம்களைப் பற்றி அதிகமான எதிர்மறையான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
கடந்த 30 வருடங்களாக அமெரிக்காவில் 80%, பிரிட்டனில் 79%, கனடாவில் 79%, ஆஸ்திரேலியா 77% ஊடகங்கள் முஸ்லிம்கள் குறித்து எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டுள்ளன.
இம்மாதிரியான எதிர்மறையான விளைவுகளால் அமெரிக்காவில் உள்ள இளம் முஸ்லிம்கள் தங்களை பலவீனமானவர்களாகவும், அரசின் மீது நம்பிக்கையற்றவர்களாகவும் உணர்கின்றார்கள். எனவே, இம்மாதிரியான எதிர்வினைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் இந்த ஆய்வுகளின் மூலம் வலியுறுத்துகிறோம். இவ்வாறு செய்வதன் மூலம் அனைவருக்கும் நியாயமான மனிதாபிமான கொள்கைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டுரை உறுதுணை: THE CONVERSATION