இலங்கையின் வெள்ளத்தால் 5 லட்சம் பேர் பாதிப்பு: பலியானோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

இலங்கையின் வெள்ளத்தால் 5 லட்சம் பேர் பாதிப்பு: பலியானோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு
Updated on
1 min read

‘இலங்கையில் மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை, 82-ஆக உயர்ந்துள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்’ என, இலங்கையில் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

பல மாவட்டங்களில் நேற்று வரை மழை தொடர்ந்து பெய்துவந்த நிலையில், இன்னும் அதிகமான இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும், பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 5 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக கணிக்கப்படுகிறது. அதில் 3 லட்சம் பேர் அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்னர்.

பல இடங்களில் தேங்கும் மழை நீரால் மக்களுக்கு பல்வேறு நோய் தாக்கும் அபாயம் உள்ளதால், ஆங்காங்கே மருத்துவக் குழுவினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே கடந்த செவ்வாய் கிழமை, கேகாலை மாவட்டத்தில் அரநாயகே பகுதியில் மூன்று கிராமங்கள் நிலச்சரிவில் புதைந்து போன இடத்தில், இறந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் மட்டும், 140-க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இடைவிடாது பொழியும் மழையால், மீட்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, இலங்கையின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in