Published : 26 May 2022 07:12 AM
Last Updated : 26 May 2022 07:12 AM

இலங்கையில் நிதியமைச்சராகவும் ரணில் பொறுப்பேற்றதன் பின்னணி

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று நிதியமைச்சராக பொறுப்பேற்றார். இலங்கையில் ஏற்பட்ட கடும்பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதையடுத்து மகிந்த ராஜக்பச, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தனது வீட்டை மக்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதால், அவர் திரிகோணமலை கடற்படை தளத்துக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்றார்.

பொருளாதார நெருக்கடி சூழலை சமாளிக்க அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச திட்டமிட்டார். அதனால், 5 முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, புதிய பிரதமராக கடந்த 12-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் வெளிநாடுகளுடன் பேசி,இலங்கைக்கு எரிபொருள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டார். அரசியல் சாசனத்திலும் சீர்திருத்தத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இடைக்கால பட்ஜெட் தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து கட்சிகளையும் சார்ந்துள்ளார். வெளிநாட்டு க டன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், திவால் அறிப்பை இலங்கை கடந்தமாதம் வெளியிட்டது. இந்நிலையில இலங்கை அமைச்சரவை கடந்த 20-ம் தேதி விரிவுபடுத்தப்பட்டது. அப்போது கல்வி, துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து, சுகாதாரம், நீதித்துறை, வர்த்தகம் போன்ற துறைகளில் 9 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அப்போது நிதியமைச்சர் நியமிக்கப்படவில்லை.

இதையடுத்து கடந்த 23ம் தேதி, அமைச்சரவை இரண்டாவது முறையாக விரிவுபடுத்தப்பட்டது. அப்போது 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் ஆளும் லங்காபொதுஜன பெரமுன கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், இலங்கை சுதந்திர கட்சி, தமிழர்களின் ஈழம் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அப்போதும் நிதியமைச்சர் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, நிதியமைச்சராக அதிபர் கோத்தபயராஜபக்ச நேற்று நியமித்தார். இதையடுத்து அவர் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இத்துறையின் கீழ், நிதி, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x