

சிங்கப்பூரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று கோரி, தாக்கல் செய்திருந்த மனுவை குற்றம் சாட்டப்பட்டோர் வாபஸ் பெற்று விட்டனர்.
சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த கலவரத்தில் 54 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். 23 வாகனங்கள் சேதமடைந்தன. கலவரம் தொடர்பாக 25 இந்தியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் சிலருக்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி அருண், ராஜேந்திரன், ரவி அருண் ஆகியோர் மனு செய்திருந்தனர்.
இந்நிலையில், அருண் உள்ளிட்டோரின் வழக்கறிஞர் எம்.ரவி கூறுகையில், “வழக்கின் விசாரணை விரைவில் தொடங்கவுள்ளதால், நிபந்தனைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்று விட்டோம்” என்றார்.