Published : 25 May 2022 06:12 PM
Last Updated : 25 May 2022 06:12 PM

ஆப்கனில் பெண்களுக்கு ஆதரவாக முகத்தை மூடி செய்தி வாசித்த ஆண்கள்

காபூல்: ஆப்கானில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற தலிபான் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆண் பத்திரிகையாளர்களும் முகத்தை மூடி, பெண் பத்திரிகையாளர்களுக்கான தங்களது ஆதரவைப் பதிவு செய்தனர்.

ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா உத்தரவிட்டார்.

தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் எதிர்ப்பு தெரிவித்திருந்து. பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஆப்கானில் இந்த பிற்போக்குத்தனமான உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சனிக்கிழமை முதல் பொதுவெளிகளில் வரும் பெண்கள் தங்கள் உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா வகை ஆடைகளை அணிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை முகத்தை மறைத்து திரையில் தோன்றும்படி அறிவுறுத்தியுள்ளன.

இதுகுறித்து செய்தி வாசிப்பாளர் மஹிரா கூறும்போது, “கடந்த சனிக்கிழமை எனக்கு மிகவும் கடினமான நாளாக இருந்தது. நான் புர்கா அணிந்திருந்தபோது என்னை நான் மனித இனமாகவே உணரவில்லை. நாங்கள் உயிருடன் புதைக்கப்பட்டதைப் போன்ற உணர்வை அவர்கள் ஏற்படுத்தினார்கள். நான் மிகப் பெரிய தவறு செய்திருக்கிறேன் அதனால்தான் இறைவன் என்னை ஆப்கான் பெண்ணாக பிறக்கச் செய்துள்ளார். எந்தச் சட்டத்தில் சொல்கிறது, டிவியில் பெண்கள் தங்கள் முகத்தை மறைத்து கொள்ள வேண்டும் என. அரபு நாடுகளில் கூட பெண்கள் தங்கள் முகத்தை மூடுவது இல்லை” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற தலிபான்களின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் பத்திரிகையாளர்களும் முகத்தை மூடி செய்திகளை வழங்கினர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பெண் செயற்பாட்டாளர் சாஹர் ஃபெட்ரத் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆண் பத்திரிக்கையாளர்களும் தங்களது முகத்தை மறைந்துள்ள செயல் நிச்சயம் பாராட்டப்படக் கூடியது. நாடு முழுவதும் பெண்களே இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பு வந்த வேளையில், ஆண்களின் இந்த முயற்சி பாராட்டக் கூடியது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x