Published : 25 May 2022 09:11 AM
Last Updated : 25 May 2022 09:11 AM

'துப்பாக்கி கலாச்சாரத்துக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது' - அமெரிக்க அதிபர் பைடன்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் தருணம் வந்துவிட்டது என்றும் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அதிபர் பைடன், "எப்போது தான் நாம் அனைவருமே துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக ஒருமித்த குரல் கொடுக்கப்போகிறோம்? இன்னும் சிலர் 'துப்பாக்கி சுதந்திரத்தை' ஆதரிக்கின்றனரே! துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு குடிமகனும் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை இழப்பது பெற்றோருக்கு நீங்கா சோகம். நான் 1972ல் ஒரு விபத்தில் என் மனைவியையும், மகளையும் இழந்தேன். 2015ல் என் மகன் புற்றுநோயால் இறந்தார். ஒரு குழந்தையை இழப்பது ஆன்மாவின் ஒரு துண்டை பிய்த்து எடுப்பதுபோன்று வலி தரும். நெஞ்சில் ஒரு வெறுமை ஏற்படும். ஏதோ ஒன்று உங்களை முழுவதுமாக உரிஞ்சு கொள்வதுபோல் இருக்கும்" என்று கூறினார்.

அதேபோல் துணை அதிபர் கமலா ஹாரிஸ், "நடந்தது எல்லாம் போதும். இதயம் நொறுங்கிவிட்டது. துணிந்து நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நடந்தது என்ன? சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தக் கொடூரச் செயலை செய்த நபர் 18 வயது மதிக்கத்தக்க நபர் என்பதும், அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் கவர்னர் கிரெக் அபோட் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹூஸ்டன் பகுதியில் உள்ள சாண்டா ஃபே உயர்நிலைப் பள்ளியில் 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.

அந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் டெக்ஸாஸ் சம்பவமும் நிகழ்ந்துள்ளது அமெரிக்கர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ரைபிள் துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த அந்த வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர், ஒரு பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கொல்லப்பட்டனர். அதேநேரம் 18 வயது நபரும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துள்ளார்.

மே மாதத்தில் 4வது துப்பாக்கிச் சூடு சம்பவம்: மே மாதத்தில் மட்டும் டெக்சாஸ் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம், நியூயார்க் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சம்பவம், லிஃபோர்னியா மாகாணத்தில் தேவாலயம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு தற்போது பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு என 4 சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் தான் அதிபார் பைடன் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x