Published : 24 May 2022 08:00 PM
Last Updated : 24 May 2022 08:00 PM

உணவை ஆயுதமாக்கும் ரஷ்யா? - 2 கோடி டன்கள் கோதுமை உக்ரைனில் தடுப்பு: சமரசம் செய்யும் ஐ.நா.

நியூயார்க்: சமையல் எண்ணெய், கோதுமை என உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இது செயற்கையான தட்டுப்பாடு எனவும் இதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாகவும், உக்ரைன் போரில் ரஷ்யா உணவை ஆயுமாக்கியுள்ளதாகவும் அமெரிக்கா விமர்சித்துள்ளது. உக்ரைனில் 2 கோடி டன்கள் கோதுமையை ரஷ்யா தடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதனையடுத்து சமரச முயற்சியில் ஐ.நா. இறங்கியுள்ளது.

உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாதிப்பும் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும் கடுமையாக எதிரொலிக்கிறது. மலேசியோ, இந்தோனேஷியா என பாமாயில் உற்பத்தி செய்யும் நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சமையல் எண்ணெயை தொடர்ந்து உலக அளவில் கோதுமைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி இறுதியில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக உலகில் இந்தியாவின் கோதுமைக்கான தேவை மேலும் அதிகரித்தது. கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியதில் இருந்து கருங்கடல் பகுதியில் இருந்து கோதுமை ஏற்றுமதி குறைந்ததை அடுத்து, உலகளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

உலக அளவில் கோதுமைக்கு தேவை ஏற்பட்டதால் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து கோதுமை வாங்கும் பல நாடுகள் மற்ற நாடுகளை நாடின. உலகில் கோதுமை ஏற்றுமதி செய்யும் முதல் 5 நாடுகளில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஏற்றுமதியில் முப்பது சதவிகிதம் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வருகிறது.

ரஷ்யாவின் கோதுமையில் பாதியை எகிப்து, துருக்கி மற்றும் வங்கதேசம் வாங்குகின்றன. உக்ரைனில் இருந்து எகிப்து, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், துருக்கி, துனிசியா ஆகிய நாடுகள் கோதுமை வாங்குகின்றன.

கோதுமை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் ரஷ்யா- உக்ரைன் இரண்டு நாடுகளும் போரில் சிக்கியுள்ளன. இதனால் அவற்றின் வழக்கமாக கோதுமை வாங்கும் நாடுகள் வேறு நாடுகளை தேடும் சூழல் ஏற்பட்டது. இதனால் அந்த நாடுகளிலும் தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட்டது.

உலக அளவில் கோதுமை உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கோதுமைக்கு தேவை ஏற்பட்டதால் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி கடந்த 2 மாதங்களாகவே அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காரணமாக மத்திய அரசு தடையும் விதித்தது.

2 கோடி டன்கள் கோதுமை

இந்தநிலையில் உக்ரைனுக்கு எதிராக போர் செய்து வரும் ரஷ்யா உணவை ஆயுதமாக மாற்றியுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனில் இருந்து உலக நாடுகளுக்கு செல்லக்கூடிய 2 கோடி டன்கள் உணவு கோதுமையை ரஷ்யா தடுத்துள்ளது. இதனால் உலக அளவில் உணவுப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி சோளம், பார்லி, சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக உக்ரைன் உள்ளது. இந்த உணவுப்பொருட்களும் உக்ரைனில் இருந்து ஏற்றுமதி ஆக முடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது உலகளவில் உணவு பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, விலைவாசி அதிகரிக்க செய்துள்ளது.

ரஷ்யாவும் உக்ரைனும் உலகளாவிய கோதுமை சப்ளையில் 30%மும், சன் பிளவர் ஆயில் உற்பத்தியில் 60%மும் பங்கு வகிக்கின்றன. இது மட்டும் அல்ல இன்னும் பல முக்கிய பொருட்கள் ஏற்றுமதியினை உக்ரைன் செய்து வருகிறது. உக்ரைன், ரஷ்யாவில் இருந்து இவற்றைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக போர் செய்து வரும் ரஷ்யா, செயற்கையாக உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உலக நாடுகளை வழிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துகிறது, இதுதான் உண்மை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

உலகெங்கும் உணவு விநியோகம் குறைந்துள்ளது. விலைகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன. அதேநேரம் ரஷ்யாவின் தடைகளால் பயன்படுத்தப்பட முடியாமல் உக்ரேனிய களஞ்சியங்களில் சுமார் 20 மில்லியன் டன்கள் தானியங்கள் முடக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் கருங்கடல் துறைமுகங்கள் மீதான தடையை ரஷ்யா நீக்கி, உலகம் முழுவதும் உணவு மற்றும் உரங்களின் சப்ளையை சரி செய்ய வேண்டும். மேலும் வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் உணவு பற்றாக்குறைக்கு மத்தியில், உலகின் உணவு சப்ளையை ரஷ்யா பிணையக் கைதியாக பிடித்து வைத்துள்ளது.

உக்ரேனிய மக்களின் உணர்வுகளை உடைக்க ரஷ்யா இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம். படை மூலம் சாதிக்க முடியாததை இப்படியேனும் சாதிக்கலாம் என ரஷ்யா நினைக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா பதிலடி

ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ரஷ்யர்கள் சரியான சூழ்நிலையில் உலகம் முழுவதும் தேவையான உணவை உற்பத்தி செய்வதில் திறமையானவர்கள் என ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘ஆனால் ஒருபுறம் ரஷ்யா மீது பல நாடுகள் இணைந்து பைத்தியக்காரத்தனமான பொருளாதாரத் தடைகளை விதித்துவிட்டு, மறுபுறம் உணவை வழங்குமாறு கோருகின்றனர்.

சிறப்பான உணவு அறுவடையை பெற விவசாயத்தில் திறமையானவர்கள் தேவை. அத்துடன் முறையான உபகரணங்கள் மற்றும் உரங்கள் தேவை.

உலகெங்கும் தேவையான அளவு உணவுப் பொருட்களின் இருப்பை உறுதி செய்வது எப்படி? என்று எங்களுக்குத் தெரியும். உணவு இருப்பை உறுதி செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் எங்களிடம் உள்ளன. அதனைச் சரியாகச் செய்ய வேண்டுமானால் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது. நாங்கள் வேலை செய்வதைத் தடுக்கக்கூடாது

நீங்கள் தடை விதிப்பீர்கள். ஆனால் நாங்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் அது நடக்காது. நாங்கள் முட்டாள்கள் அல்ல’’

என அவா் குறிப்பிட்டுள்ளார்.

சமரசம் செய்யும் ஐ.நா.

இதுபோலவே சர்வதேச உணவு நெருக்கடிக்கு ரஷ்யா காரணம் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என ரஷ்யாவிற்கான ஐ.நா. தூதுவர் வசிலி நெபென்சியா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரினால் உலக நாடுகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து உணவு ஏற்றுமதியை மீண்டும் தொடங்கவும், உர உற்பத்தியை உலக சந்தைகளுக்கு கிடைக்கச் செய்யவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x