Published : 24 May 2022 07:09 AM
Last Updated : 24 May 2022 07:09 AM

13 நாடுகளின் புதிய கூட்டமைப்பு தொடக்கம் - பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் பங்கேற்பு

புதுடெல்லி: அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பை (ஐபிஇஎப்) உருவாக்கி உள்ளன.

இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டில் குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. ஜப்பானில் நடைபெறும் இந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக நேற்று முன்தினம் டோக்கியோ சென்றார். விமான நிலையத்தில் நேற்று காலை தரையிறங்கிய அவருக்கு இந்திய வம்சாவழியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, தென்கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. சீனாவின் வளர்ச்சி, ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் நேற்று நடைபெற்ற விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய கூட்டமைப்பை தொடங்கிவைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, ‘‘உலக பொருளாதாரத்தில் சுமார் 60 சதவீதத்தை கூட்டமைப்பு நாடுகள் கொண்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் அதிவேகமாக வளர்ச்சி அடையும்" என்று தெரிவித்தார்.

இந்திய வம்சாவழியினர் கூட்டம்

இதைத் தொடர்ந்து டோக்கியோவில் இந்திய வம்சாவழியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான நண்பர்கள். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் உறுதுணையாக இருக்கிறது. தீவிரவாதம், சர்வாதிகாரம், வன்முறை, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் மனித குலத்தை காப்பாற்ற புத்தரின் போதனைகளை பின்பற்ற வேண்டும்.

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் ஜனநாயகம் வலுவடைந்து உள்ளது. உலகின் ஒட்டுமொத்த டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் 40 சதவீத பணப் பரிமாற்றம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்காக இந்தியர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

டோக்கியோவில் இன்று காலை நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிற்பகலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவர் தனியாக சந்தித்து பேசுகிறார். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x