'அமெரிக்க அழுத்தத்திற்கு பணியாத இந்தியா'- பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு இம்ரான் கான் பாராட்டு

'அமெரிக்க அழுத்தத்திற்கு பணியாத இந்தியா'- பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு இம்ரான் கான் பாராட்டு
Updated on
1 min read

அமெரிக்க அழுத்தத்திற்குப் பணியாமல் ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து எரிபொருள் விலையை இந்தியா குறைத்துள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் பதவியில் இருந்தபோதே பிரதமர் மோடியை பல தருணங்களில் பாராட்டியிருக்கிறார். இதற்காக உள்நாட்டில் எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் ஒருமுறை தனது பாராட்டை அவர் பதிவு செய்துள்ளார். முன்னதாக நேற்று பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 வீதம் குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 என 12 சிலிண்டர்களுக்கு பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள் 9 கோடி பேருக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், "குவாட் அமைப்பில் இருந்தும் கூட, அமெரிக்க அழுத்தங்களை மீறி இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது. பாகிஸ்தானில் இதுமாதிரியான சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை எட்டவே நான் பாடுபட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் இருக்கும்போது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் அரசு தலையில்லாத கோழி போல் கிடக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in