கனடா நாடாளுமன்றத்தில் கன்னடத்தில் பேசிய சந்திரா ஆர்யா.
கனடா நாடாளுமன்றத்தில் கன்னடத்தில் பேசிய சந்திரா ஆர்யா.

கனடா நாடாளுமன்றத்தில் கன்னடத்தில் பேசிய எம்.பி.: சமூக வலைதளங்களில் வைரலான‌ வீடியோ

Published on

பெங்களூரு: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சந்திரா ஆர்யா, கனடா நாடாளுமன்ற‌ அவையில் முதல் முறையாக கன்னடத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

கர்நாடகாவின் துமக்கூரு மாவட்டம், சிரா தாலுகா துவகூரு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா ஆர்யா (59). எம்பிஏ படித்த இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பணி நிமித்தமாக கனடாவில் குடியேறினார். கடந்த 2019-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஒன்டாரியோவில் உள்ள நேப்பியன் தொகுதியில் போட்டியிட்டு கனடாவின் கீழ் சபைக்கு தேர்வு ஆனார்.

சந்திரா ஆர்யா அண்மையில் கனடா நாடாளுமன்றத்தில் தனது தாய்மொழியான கன்னடத்தில் பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் சந்திரா ஆர்யா பேசியதாவது:

கனடா நாடாளுமன்றத்தில் எனது தாய்மொழியான கன்னடத்தில் பேசுவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய நாட்டில் கர்நாடகாவின் துமக்கூரு மாவட்டம் சிரா தாலுகா துவகூரு கிராமத்தில் பிறந்த நான் கனடா நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

மிக அழகான மொழியான கன்னடத்துக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது.

முதல் முறையாக...

சுமார் 5 கோடி மக்கள் இந்த மொழியை பேசுகிறார்கள். இந்தியாவுக்கு வெளியே உலகின் எந்த நாடாளுமன்றத்திலும் கன்னடம் பேசப்பட்டதில்லை. முதல்முறையாக கனடா நாடாளும‌ன்றத்தில் கன்னடம் பேசப்படுகிறது. இது 5 கோடி கன்னடர்களுக்கும் பெருமையான தருணமாகும். இவ்வாறு சந்திரா ஆர்யா பேசினார்.

அவையில் இருந்த சக உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சந்திரா ஆர்யாவின் பேச்சு கர்நாடக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகத்தை விட்டு சென்று கனடாவில் குடியேறினாலும், தாய்மொழி மீது அவருக்கு உள்ள பற்றை பலரும் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in