Published : 21 May 2022 04:32 PM
Last Updated : 21 May 2022 04:32 PM

இலங்கையில் 2 வாரங்களாக நீடித்து வந்த அவசர நிலை நீக்கம்

கொழும்பு: பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளுங்கட்சிக்கு எதிராக இலங்கையில் நடந்து வந்த போராட்டங்களைத் தொடர்ந்து, அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அவசர நிலை 2 வாரங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச மே 6-ம் தேதி முதல் நாட்டில் அவரச நிலையை பிரகடனம் செய்தார். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவசர நிலை விலக்கிக் கொள்ளப்படுவதாக இலங்கையின் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டில் சட்டம் - ஒழுங்கை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை தவறுதலாக கையாண்ட ராஜபக்ச குடும்பம் பதவியை விட்டு விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது. இந்தக் கலவரத்தால் 9 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேர் காயமடைந்தனர்.

புதிய அமைச்சரவை: மகிந்த ராஜபக்சவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, நாட்டின் புதிய பிரதமாராக ரணில் விக்ரமசிங்கவை அதிபர் கோத்தப ராஜபக்ச நியமித்தார். நாட்டில் நிலவிவரும் கடுமையான நெருக்கடி நிலையைத் தொடர்ந்து பதவிக்கு வந்துள்ள ரணில் விக்ரமசிங்க நிலைமையை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவரது அமைச்சரவையில் துறைமுகங்கள் கப்பல்கள், விமான சேவைத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதற்கிடையே, அங்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இவற்றை பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியது: "நாட்டில் தற்போது பயிர் செய்வதற்கு தேவையான ரசாயன உரங்கள் எதுவும் இல்லை. இதனால், நெல் சாகுபடி பருவத்தில் உற்பத்தியும் இருக்காது. எனவே, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது. உலக அளவில் தற்போது உணவு நெருக்கடி நிலவுகிறது. வரும் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான சாகுபடி பருவத்துக்கு தேவையான உரங்களை பெற முயற்சித்து வருகிறோம். நாட்டின் இந்த நெருக்கடிக்கு கடந்தகால அரசின் நிர்வாகமே காரணம்.

மக்களுக்கு வேண்டுகோள்: நாம் திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டோம். இதுபோன்ற நிலை இலங்கையில் ஒருபோதும் இருந்தது இல்லை. நம்மிடம் தற்போது டாலரும் இல்லை. ரூபாயும் இல்லை. நாம் நிலையான நிலையில் இல்லை. மக்களால் இனியும் சுமையை தாங்க முடியாது. இந்த இக்கட்டான சூழலில், தற்போதைய நிலையை தாங்கிக் கொள்ளுமாறு நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இலங்கையில் நிலவிவரும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, இலங்கை அரசு பல முக்கிய அறிவிப்புகளை நேற்று வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு அனுமதி பெற்று இயங்கும் அனைத்து பள்ளிகளும் 20-ம் தேதி (நேற்று) முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

அதேபோல, அத்தியாவசிய பணியில் உள்ளவர்கள் தவிர மற்ற அதிகாரிகள் 20-ம் தேதி (நேற்று) முதல் பணிக்கு வர வேண்டாம் என்று இலங்கை பொது நிர்வாக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்தை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா கூறும்போது, “இலங்கை கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெட்ரோலை பெற நாட்டின் கைவசம் அந்நியச் செலாவணி இல்லை. கப்பல் நிறுவனத்துக்கு ஏற்கெனவே ரூ.400 கோடி நிலுவைத் தொகை தர வேண்டும். அதை கொடுத்த பிறகே, மேலும் பெட்ரோல் வாங்க முடியும். எனவே, பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் காத்துக் கிடக்க வேண்டாம்” என்றார்.

சிலிண்டர் விலை ரூ.5,000: சமையல் எரிவாயு சிலிண்டர், எரிபொருள் உள்ளிட்டவை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. கொழும்பு நகரில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சிலிண்டர் விலை ரூ.2,675 ஆக இருந்தது. அது தற்போது சுமார் ரூ.5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இலங்கைக்கு சுமார் 5,000 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு வங்கிகள், நிறுவனங்களிடம் கடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், தற்போதைய சூழலில், கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இலங்கை உள்ளது என்று தெற்காசிய சென்ட்ரல் வங்கியின் கவர்னர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x