

'மிஸ் அமெரிக்கா' நினா டவுலூரியை நடனமாடச் சொன்ன பள்ளி மாணவன் பள்ளியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளான்.
பென்சில்வேனியாவில் சென்ட்ரல் யார்க் உயர்நிலைப் பள்ளிக்கு, ‘மிஸ் அமெரிக்கா' பட்டம் வென்ற நினா டவுலூரி வந்திருந்தார். அங்கு அவர் மாணவர்களிடத்தில் கலாச்சார வேற்றுமை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பாடங்களின் முக்கியத்துவம் குறித்து உரையாற்ற திட்டமிட்டிருந்தார்.
முன்னதாக அவர் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கையில், பாட்ரிக் ஃபார்வெஸ் எனும் 18 வயது மாணவன் நினா டவுலூரியை நடனமாடச் சொன்னான். மேலும் மேடைக்குச் சென்று அவரிடத்தில் பிளாஸ்டிக் பூ ஒன்றையும் கொடுத்தான். மாணவனின் இந்தச் செயலைக் கண்டு நினா சிரிக்க சக மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.
மாணவனின் இந்தத் திட்டத்தை முன்பே அறிந்திருந்த ஆசிரியர்கள் ‘இதுபோன்று செயல்பட வேண்டாம்' என்று எச்சரித்திருந்தனர். ஆனால் அதையும் மீறி மாணவன் செயல்பட்டான். மேலும் தன் செயலுக்கு மன்னிப்பும் கோரினான்.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளி நிர்வாகம் அவனை மூன்று நாட்கள் பள்ளியிலிருந்து இடை நீக்கம் செய்துள்ளது.
நினா டவுலூரி இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.