

கியூபாவில் மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது அமெரிக்கா. மேலும் உலகளாவிய மனித உரிமைகளை கியூபா அரசு மதித்து நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறியபோது, "சமீப காலமாக கியூபாவில் மனித உரிமை ஆர்வலர்களான ஜார்ஜ் லூயி கார்சியா பரேஸ், அவரது மனைவி ஐரிஸ் பரேஸ் ஆகிலெரா, ‘லேடீஸ் இன் வொயிட்' அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பெர்டா சோலெர் மற்றும் அவரது கணவர் ஏஞ்சல் மோயா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பத்திரிகையாளரான ராபர்ட்டோ தி ஜீசஸ் கெர்ரா கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்திருக்கிறார். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக் கிறோம்" என்றார்.
மேலும் அவர், "நியாயமற்ற முறையில் மனித உரிமை ஆர்வலர்களைக் கைது செய்திருப்பதுடன், அதை எதிர்த்து நடந்த அமைதி வழி ஆர்ப்பாட்டத்தைக் கலைத்தும் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களை நீதிமன்றத்துக்கு வரவிடாமலும் கியூபா அரசாங்கம் தடுத்துள்ளது.
இந்த விஷயங்களை எல்லாம் உடனே முடிவுக்குக் கொண்டு வருவதுடன், உலகளாவிய மனித உரிமை நடைமுறைகளைப் பின்பற்றி குடிமக்களை கியூபா அரசு மதிக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் இனி நடைபெறக்கூடாது" என்று கூறியுள்ளார்.