Published : 19 May 2022 06:00 AM
Last Updated : 19 May 2022 06:00 AM

இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,240 கோடி உதவி: பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல்

கொழும்பு: இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,241 கோடி நிதி உதவியை (16 கோடி அமெரிக்க டாலர்கள்) வழங்குவதாக நேற்று அறிவித்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடி, உணவு பொருட்கள் விலை உயர்வு, வருமான இழப்பு, எரிபொருள் பற்றாக்குறை மக்கள் போராட்டம், ஆட்சி மாற்றம் எனப் பல பிரச்சினைகளில் இலங்கை தவித்து வருகிறது.

இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து அண்மையில் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் எடுத்து வருகிறார்.

இதனிடையே, இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி செய்வதற்கும், அதற்கான பணத்தைச் செலுத்துவதற்காகவும் உலக வங்கியிடம் இலங்கை நிதியுதவியை எதிர்பார்த்தது.

இந்நிலையில், நேற்று 16 கோடி அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ. 1,241 கோடி) இலங்கைக்கு வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த நிதியுதவி கிடைத்த விவரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று உறுதி செய்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “தற்போது உலக வங்கியிடம் பெற்றுள்ள கடனை எரிபொருள் இறக்குமதிக்குப் பயன்படுத்த முடியுமா என்பதை நாங்கள்ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இதற்கான முடிவை அறிவிப்போம்” என்றார்.

வெளியில் வந்தார் ராஜபக்ச

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே (76) ஆகியோர் பதவி விலக கோரி கலவரத்தில் ஈடுபட்டனர். ஆனால், மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

அதனால் இலங்கை தலைநகர் கொழும்புவில் கலவரம் வெடித்தது. ஆளும் கட்சி எம்.பி. அவரது ஓட்டுநர் ஒருவர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் அரசு இல்லத்தை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். அத்துடன், ஆளும் கட்சி எம்.பி.க்கள் பலருடைய வீடுகள், வாகனங்களை போராட்டக்காரர்கள் எரித்தனர்.

இந்த கலவரத்தில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நாட்டில் நெருக்கடி அதிகரித்ததால் தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

தனது அரசு இல்லத்தில் இருந்து தப்பி திரிகோணமலையில் உள்ள கப்பற்படை முகாமுக்கு மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்துடன் சென்றார். அங்கு பலத்தப் பாதுகாப்பில் இருந்து வருகிறார். மேலும், இலங்கையில் வழக்கமாக முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்ந்து மகிந்த ராஜபக்சேவுக்கும் வழங்கப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தீர்மானம் தோல்வி

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மகன் நமல் ஆகியோர் முதல் முறையாக பங்கேற்றனர். ஆனால், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த கூட்டத்தில் மகிந்த ராஜபக்சே மற்றும் நமல் ஆகியோர் பங்கேற்கவில்லை. கடைசியில் அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x