Published : 18 May 2022 07:16 AM
Last Updated : 18 May 2022 07:16 AM
கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறும்போது, "இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. மார்ச் 2021 நிலவரப்படி 4,500 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது. விமானத்தில் பயணம் செய்யாத ஏழை மக்கள், விமான நிறுவனம் எதிர்கொண்டுள்ள நஷ்டத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை. இதைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனத்தை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்காக ரூபாய் நோட்டுகளை (கரன்சி) அச்சடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
அதேநேரம் கரன்சி புதிதாக அச்சிடுவதால் நாட்டின் நாணய மதிப்பு மேலும் சரிவடையும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தற்போது ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான அளவில் கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்த நிலையில் வெளிச்சந்தையில் டாலரை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. கச்சா எண்ணெயுடன் 3 கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் உள்ளன. இவற்றுக்கு பணம் செலுத்தினால் மட்டுமே அவற்றை இறக்குமதி செய்ய முடியும். அதற்குத் தேவையான பணத்தை திரட்டவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரணில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT