அதிகாரிகளை விமர்சித்த கிம்; ராணுவம் மூலம் மருந்து விநியோகம்: தென் கொரியா உதவி

அதிகாரிகளை விமர்சித்த கிம்; ராணுவம் மூலம் மருந்து விநியோகம்: தென் கொரியா உதவி
Updated on
1 min read

பியோங்யாங்: வட கொரியாவில் கரோனா பரவலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அதிபர் கிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.மேலும் கரோனாவை தடுக்க மக்களுக்கு மருந்துகளை உடனடியாக விநியோகம் செய்யுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

வட கொரியாவில் மருந்தகம் ஒன்றில் அதிபர் கிம் நேரடியாக பார்வையிட்டபோது அங்கு மருந்து பற்றாக்குறை உள்ளதை அவர் நேரிடையாகக் கண்டார். இதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் ஓன்றை நடத்தினார். அக்கூட்டத்தில் அதிபர் கிம் அதிருப்தி அடைந்து காணப்பட்டதாக வட கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து வட கொரிய அரசு ஊடகத்தில் கிம் பேசும்போது, “அரசால் கொள்முதல் செய்யப்படும் மருந்துகள், மருந்தகங்கள் மூலம் உரிய நேரத்தில் மக்களிடம் சென்றடைவதில்லை. சுகாதார அதிகாரிகள் உரிய பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை. 24 மணி நேரமும் மருந்தகங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு மருந்துகள் விநியோகம் செய்யப்பட வேண்டும். பியோங்யாங் நகரில் ராணுவம் மக்களிடம் மருந்துகளை சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

உதவும் தென் கொரியா: வட கொரியாவில் மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. குறிப்பாக கரோனா வைரஸை கண்டறியும் ஆய்வகங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்தச் சூழலில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அண்டை நாடான வட கொரியாவுக்கு உதவ தயார் என்று தென்கொரியா தெரிவிந்துள்ளது.

வட கொரியாவில் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கை கிம் அறிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in