

இராக்கில் இந்தியர்கள், துருக்கியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் கடத்தப்பட்டது, கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குமாறு ஐ.நா. உதவி மையம் வலியுறுத்தியுள்ளது.
இராக் அரசுக்கும் சன்னி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான உள்நாட்டு போரில் பொது மக்கள் எராளமாமோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஐ.நா. உதவி மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: இராக்கில் இதுவரை கலவரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் பாக்தாதில் 300க்கு அதிகமானோர் கார் குண்டுவெடிப்பில் பலியாகி உள்ளனர். சட்ட ரீதியான படுகொலைகள், ஒட்டுமொத்தமான மரண தண்டனை என 757 பேர் இராக்கில் படுகொலைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேற்கு மாகாணங்களில் அப்பாவி மக்களை கடத்தும் சம்பவங்கள் சுலபமாக நடக்கின்றன. இந்த மாதத்தில் மட்டும் 40 இந்தியர்களும் 48 துருக்கியர்களும் கடத்தப்பட்டுள்ளனர். இதை தவிர கட்டுமான பணியில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றிய 40 இந்தியர்கள் கூண்டோடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதற்கான ஆதாரத்தை அம்னெஸ்டி சேகரித்துள்ளது. தொழிலாளர்கள் பலருக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் கூட வழங்கப்படவில்லை என்பதை அம்னெஸ்டி குறிப்பிட்டுள்ளதை ஐ.நா. உதவி மைய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
உள்நாட்டு போரின்போது வெளிநாட்டவர்கள் மீதான மனித உரிமை மீறல் மற்றும் படுகொலைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ நா தலைவர் பான் கீ மூன் வலியுறித்தியுள்ளார்.