

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்குவதற்காக, தமிழர் பகுதியில் கூட்டாட்சி முறையை அமல்படுத்த வேண்டும் என்ற வடக்கு மாகாண தீர்மானத்துக்கு மேற்கு மாகாண கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கூட்டாட்சி முறையை அமல்படுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பெரும்பான்மையாக உள்ள சிங்களர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தத் தீர்மானத்துக்கு எதிராக சிங்களர்கள் அதிகம் வசிக்கும் மேற்கு மாகாண கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து ஜாதிக ஹெல உருமயா கட்சியின் மாகாண கவுன்சிலரும் அதிபர் மைத்ரிபால ஸ்ரீசேனாவின் ஆலோசகருமான நிஷாந்த ஸ்ரீ வார்னசிங்கே கூறும்போது, “இலங்கையில் வசிக்கும் தமிழர்களுடன் சமரசமாக பழக நாடே தயாராகி வருகிறது. இந்நிலையில், வடக்கு மாகாண கவுன்சிலின் கூட்டாட்சி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அதிபர் மற்றும் பிரதமரை வலியுறுத்தி உள்ளோம். மொழி, இன அடிப்படையில் இரண்டு தனித்தனி அரசை உருவாக்க வடக்கு மாகாணம் முயற்சிக்கிறது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது” என்றார்.