எரிந்து போன யாழ் நூலகம் தான் என் நினைவுக்கு வருகிறது... பற்றி எரியும் அந்த வீட்டை பார்த்தால்!

எரிந்து போன யாழ் நூலகம் தான் என் நினைவுக்கு வருகிறது... பற்றி எரியும் அந்த வீட்டை பார்த்தால்!
Updated on
2 min read

புதுச்சேரி: "எரிந்து போன எங்கள் தமிழ் நூலகமான யாழ் நூலகம் தான் என் நினைவுக்கு வருகிறது, பற்றி எரியும் அந்த வீட்டை பார்த்தால்..." என அண்மையில் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பார்த்தேன். அந்த பதிவு தான் இந்த கட்டுரையை எழுத அடிப்படையாக அமைந்தது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாடே கலவர பூமியாக மாறி நிற்கிறது. அந்த நாட்டில் முக்கிய பதவிகளில் அங்கம் வகித்த ஆட்சியாளர்களின் வீடுகள் சூறையாடப்பட்டும், எரிக்கப்பட்டும் உள்ளன. அவர்களது நினைவாக வைக்கப்பட்ட சிலைகளும் இடிக்கப்பட்டன. சரியாக 41 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த பொது நூலகம் வன்முறையாளர்களால் எரியூட்டப்பட்டது. இப்போது அந்த சம்பவம் தான் தன் நினைவுக்கு வருவதாக சொல்கிறார் அந்த பதிவர்.

"எரிந்து போன எங்கள் தமிழ் நூலகமான யாழ் நூலகம் என் நினைவுக்கு வருகிறது பற்றி எரியும் அந்த வீட்டை பார்த்தால். ஒரு காலத்தில் என் தாத்தா மதுரையில் புத்தகக் கடை நடத்தி வந்தார். அப்போது யாழ் நூலகத்திற்கும் மதுரையிலிருந்து புத்தகம் அனுப்புவாராம். வாழ்வில் ஒருமுறையாவது யாழ் நூலகத்தை பார்த்து விட வேண்டும் என நினைத்துக் கொள்வேன்.ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும்.

தெற்காசியாவின் மிகப்பெரிய அறிவு பொக்கிஷமாக போற்றப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகத்தின் அழிப்பு என்பது மனித நாகரிகத்தின் மோசமான துயரம். 1981-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி நள்ளிரவில் இந்த கொடுமை நடந்தது. 40 வருடங்கள் கடந்து விட்டது. நூலகம் எரிக்கப்பட்ட போது 97 ஆயிரம் புத்தகங்களும், பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகளும், தனிநபர்களின் சேமிப்பு புத்தகங்களும் அழிந்தது" என தன் பதிவில் தெரிவித்துள்ளார் ஆற்றல். பிரவீன் குமார்.

அன்று இரவு என்ன நடந்தது? 1981, மே 31 அன்று இரவு யாழ்ப்பாணத்தின் பொது நூலகத்தை கலவரக்காரர்கள் எரியூட்டி உள்ளனர். அந்த பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் கலவரமாக வெடித்துள்ளது. அதையடுத்து அங்கிருந்த தமிழ் மக்களின் வீடுகள், கடைகளுக்கு தீ வைத்துள்ளனர் தொடர்ந்து அன்று இரவு அறிவுப் பொக்கிஷமாக இருந்த நூலகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

ஆறு அறைகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் முழுவதுமாக சாம்பலாகி போனது. சம்பவத்தின் போது நூலகத்தினுள் யார் இருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. தொன்மையான தமிழ் நூல்கள் அழிந்து போனது. அதன் பிறகு உள்நாட்டு போர் மூண்டது. நூலகம் இருந்த இடம் ஆள் அரவமற்று போனது. பின்னர் நகரில் வெவ்வேறு இடங்களில் கிளை நூலகங்கள் நிறுவப்பட்டது. 2001-இல் மீண்டும் புனரமைக்கப்பட்டு அதே இடத்தில் நூலகம் இயங்க தொடங்கியது என லாப நோக்கமின்றி இயங்கும் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார் முன்னாள் நூலகர் தனபாலசிங்கம்.

நூலகம் புனரமைப்புக்கு பின்னர் வழக்கம் போல இயங்கி வருகிறது. முன்பு பாதுகாக்கப்பட்டு வந்த நூலகள் இப்போது இல்லை என்றாலும் பல்லாயிரம் புத்தகங்களுடன் இயங்கி வருகிறது யாழ்ப்பாண நூலகம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in