

போர் விமானங்கள் விற்பனை தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக அமெரிக்காவுடனான உறவில் நெருக்கடி ஏற்பட்டதற்கு இந்தியா தலையீடுதான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஜ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை மானிய விலையில் கொடுப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து விமான விற்பனையை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இதனால், அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் கடந்த மூன்று மாதங்களாக அழுத்தம் ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஜ் தெரிவித்தார். எனினும், இப்பிரச்சினைக்கு தீர்வு காண இருதரப்பும் முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிஷ் தனது பேச்சின்போது, இந்தியாவின் தலையீடுதான் இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்டார். 8 எப்-16 ரக போர்விமானங்கள் பாகிஸ்தானுக்கு விற்கப்படுவதை தடுக்க இந்தியா கடும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், இந்தியாவின் கோரிக்கை புறம் தள்ளப்பட்டது. பதான்கோட் தாக்குதல் விவகாரத்தை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அமெரிக்காவில் பயன்படுத்தியது. பதான் கோட் தாக்குதலுக்குப் பிறகு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வேலையை இந்திய தரப்பு நன்றாகவே செய்தது எனவும் ஆசிஷ் குறிப்பிட்டார்.
2011-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற விக்கி லீக்ஸ் விவகாரம், ரேமண்ட் டேவிஸ் விவகாரம், அபோதாபாத் நடவடிக்கை (பின்லேடன் கொலை) போன்ற சில துரதிருஷ்டவசமான சம்பவங்களால் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டது.
ஆனால், 2013-க்குப் பிறகு இந்த உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. மருத்துவர் ஷகிஸ் அப்ரிடி கைது,. ஹக்கானி குழுவின் மீதான தாக்குதல் போன்ற விவகாரங்களை பாகிஸ்தான் கவனமாகக் கையாண்டு உறவை மேம்படுத்தி வந்தது.
இவ்வாறு ஆஜிஜ் தெரிவித்தார்.