Published : 12 May 2022 07:12 AM
Last Updated : 12 May 2022 07:12 AM
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ் இடங்களை காஷ்மீர் மாணவர்களுக்கு விற்று, அந்தப் பணத்தை தீவிரவாதத்துக்கு பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் 8 பேர் மீது என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
காஷ்மீரில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரிகளில் 200 எம்பிபிஎஸ் இடங்களை அந்நாடு ஒதுக்கியுள்ளது. இதற்கான மாணவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு ஹுரியத் மாநாடு அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த எம்பிபிஎஸ் இடங்களை பணக்கார மாணவர்களுக்கு விற்று அந்தப் பணத்தை காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கு அளித்ததாக ஹுரியத் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் 8 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் இருவர் பாகிஸ்தானுக்கு தப்பிவிட்ட நிலையில் 6 பேரை போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஹிஸ்புல் முஜாகிதீன் முன்னாள் தீவிரவாதி ஜாஃபர் அக்பர் பட்டும் ஒருவர். சில ஆண்டுகளுக்கு முன் சரணடைந்த இவர், ஜம்மு காஷ்மீர் ரட்சிப்பு இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். ஜாஃபர் அக்பர் பட், பாகிஸ்தானில் இருக்கும் அவரது சகோதரர் அல்டாஃப் அகமது பட் மற்றும் பாத்திமா ஷா, காசி யாசிர், முகம்மது அப்துல்லா ஷா, சப்ஜார் அகமது ஷேக், மன்சூர் அகமது ஷா (குப்வாராவை சேர்ந்த இவரும் பாகிஸ்தானில் உள்ளார்), மகஸ் விடுதலை முன்னணி உறுப்பினர் முகம்மது இக்பால் மீர் ஆகிய 8 பேருக்கு எதிராக ஸ்ரீநகரில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. என்ஐஏ சிறப்பு நீதிபதி மன்ஜீத் சிங் மன்ஹாஸ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாகிஸ்தான் கல்லூரிகளில் அட்மிஷன் வழங்கியதற்காக இந்த 8 பேரில் வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் ஆதாரங்கள் கிடைத்தன. இது தொடர்பாக ஆவணங்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்தப் பணத்தை தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசுவோர் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு இவர்கள் வழங்கியுள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT