

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறிய பகுதியில் இருந்து மேலும் சில சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள சினாபங் எரிமலை கடந்த சில தினங்களாக குமுறி வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை அன்று எரிமலை வெடித்துச் சிதறியதில், 4.5 கி.மீ தொலைவுக்கு அதன் சாம்பல்கள் படிந்தன.
முன்னதாக எரிமலை அருகே ஆபத்தான பகுதியாக அறியப்பட்ட இடத்தில் வசித்து வந்த பலர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். எனினும் ஒரு சிலர் எரிமலையின் கோர தாண்டவத்துக்கு பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆபத்தான பகுதிகளில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், நேற்று 4 சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2014-ல் இந்த எரிமலை வெடித்ததில் சுற்றுவட்டார கிராமப் பகுதியைச் சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.