Published : 11 May 2022 04:26 AM
Last Updated : 11 May 2022 04:26 AM

இலங்கையில் பிரதமர் இல்லம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - திரிகோணமலை கடற்படை தளத்தில் குடும்பத்தினருடன் ராஜபக்ச தஞ்சம்

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜபக்சவின் ஆதரவாளர்களுக்கு இடையே கொழும்புவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மோதலுக்குப்பின், பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. எரித்து கவிழ்க்கப்பட்ட 2 பேருந்துகள் முன்பு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: பிடிஐ

கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்ச வீட்டை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் தாக்கியதால், அவரும் அவரது குடும்பத்தினரும் ஹெலிகாப்டர் மூலம் தப்பி, திரிகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற வேண்டும் எனக் கோரி, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக போராடி வரு கின்றனர்.

முன்னதாக அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகைக்கு எதிரே காலிமுகத் திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது, மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களை வெளியேற்ற ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டது. இதற்கு போராட்டக்காரர்களும் எதிர்வினையாற்ற, இலங்கையின் பல பகுதிகளிலும் கலவரம் பரவியது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்கள் மற்றும் அரசியல்வாதிகள் என 41 பேரின் வீடுகள் மற்றும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரள நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை முதல் இன்று காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ராணுவம், போலீஸ் குவிக்கப்பட்டும் மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். கலவரத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். ஆனாலும் கொழும்புவில் உள்ள பிரதமர் இல்லத்தை சுற்றிவளைத்து போராட்டக்காரர்கள் சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதனால் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் தாக்குதலுக்கு ஆளாகும் சூழல் உருவானது.

இதையடுத்து அவரையும், அவரது மனைவி ஷிராந்தி, இளைய மகன் ரோகிதா உள்ளிட்ட குடும்பத்தினரையும் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் நேற்று அதிகாலை மீட்ட ராணுவத்தினர், திரிகோணமலை கடற்படை தளத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக தங்க வைத்தனர். இதையறிந்த மக்கள் அங்கும் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதனிடையே மேதமுலான, குருநெகலா ஆகிய பகுதிகளில் உள்ள ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகளையும் ராஜபக்ச தந்தையின் நினைவிடத்தையும் போரட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.

இந்நிலையில் ராஜபக்சவின் 2-வது மகன் யோஷிதா மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினமே நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையம் செல்லும் சாலைகளில் போராட்டக்காரர்கள் சோதனைச் சாவடி அமைத்து சோதனையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இடைக்கால அரசு அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் கோத்தபய ராஜபக்ச விடுத்த அழைப்பை, முக்கிய எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. நிராகரித்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சவும் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

போராட்டக்காரர்களை வாரன்ட் இன்றி கைது செய்து விசாரிக்கவும், அவர்களது வீடுகள், வாகனங்களில் சோதனை நடத்தவும் ராணுவத்தினருக்கும், போலீஸாருக்கும் கூடுதல் அதிகாரத்தை அதிபர் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா ஆதரவு

இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்சிக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று கூறும்போது, “இலங்கை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அங்கு ஜனநாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான வழிமுறைகளைக் கண்டு இலங்கைக்கு இந்தியா உதவும். இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாக, பல நூற்றாண்டு கால உறவு இந்தியாவுக்கு உள்ளது. அங்கு ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்சி திரும்புவதற்காக இந்தியா தனது முழுமையான ஆதரவை அளிக்கிறது. இலங்கையில் பொருளாதார மீட்சி ஏற்படுவதற்காக கடந்த மாதம் ரூ.11,400 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியது. மேலும் உணவு, மருந்து பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x