Published : 06 May 2022 04:08 PM
Last Updated : 06 May 2022 04:08 PM

தலிபான் அரசால் மறுக்கப்படும் ஓட்டுநர் உரிமம்: தவிக்கும் ஆப்கன் பெண்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பெண்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு புதிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பெண் கார் ஓட்டுநரான சைனாப் மொஹ்சேனி அளித்த பேட்டியில், “பெண்கள் வாகனங்கள் ஓட்டக் கூடாது என்று தலிபான்களிடமிருந்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை வரவில்லை. ஆனால், தற்போது பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் மறுக்கப்படுகிறது. சில சோதனைச் சாவடிகளில் தலிபான்கள் எங்களைத் தடுத்து நிறுத்துகின்றனர். இது எனக்கு அச்சத்தையே தருகிறது” என்றார்.

ஆப்கானின் பெருநகரங்களில் பெண்கள் வாகனங்களை ஓட்டுவது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், தலிபான்களின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அனைத்தும் தலைகீழாக மாறி வருகின்றன.

பெயர் குறிப்பிடாத பெண் ஒருவர் இதுகுறித்து அளித்த பேட்டியில், “இரவு நேரங்களில் என் கணவர் இல்லாத நேரத்தில் வீட்டில் எவருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போனால் யார் வாகனத்தைச் செலுத்துவார்கள். என் கணவரோ, சகோதரரோ வரும் வரை நான் காத்திருக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தனர். கடந்த முறை ஆட்சி செய்தது போல் அல்லாமல் பெண்களுக்கு அவர்களது உரிமைகளை அளிப்போம் என தொடக்கத்தில் உறுதி அளித்தனர். ஆனால், தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பெரும்பாலான பகுதிகளில் பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டது. புதிய கல்வி ஆண்டில் இத்தடை விலக்கிக் கொள்ளப்படும் என பலரும் எதிர்பார்த்தனர். இதற்கு மாறாக பெண் குழந்தைகள் 6-வகுப்புக்கு மேல் படிப்பதற்கான தடையை தலிபான்கள் நீட்டித்தனர். ஆண் உறவினர் இல்லாமல் விமானங்களில் பெண்கள் பயணிக்கவும் தலிபான்கள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x