Published : 06 May 2022 07:29 AM
Last Updated : 06 May 2022 07:29 AM
புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்துவருகிறது. இக்கட்டான சூழ்நிலையில் ரஷ்யாவுடனான நட்பை முறிக்காமல், அதேநேரம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்படாமல் இந்தியா திறம்பட காய்களை நகர்த்தி வருகிறது.
இந்த சூழலில் ஐரோப்பா உடனான வர்த்தக, பாதுகாப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற இந்தியா- நார்டிக் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது ஐஸ்லாந்து, சுவீடன், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பயணத்தில், ஐரோப்பிய தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பரிசுகளை வழங்கி உறவை வலுப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு பரிசும் இந்தியாவின் பன்முகத்தன்மை, கலைத்திறனை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.
டென்மார்க் இளவரசர் பெட்ரிக்குக்கு பிரதமர் நரேந்திர மோடி, டோக்ரா படகினை பரிசாக வழங்கினார். சுமார் 4,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மெழுகுவார்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இரும்பு அல்லாத உலோகத்தினால் இவ்வகை கலை பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சத்தீஸ்கர் கலைஞர்கள் இவற்றை நேர்த்தியுடன் உருவாக்குகின்றனர்.
டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத்துக்கு, ரோகன் ஓவியத்தை பிரதமர் மோடி பரிசளித்தார். குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட குடும்பத்தினர் ரோகன் ஓவியத்தை வரைகின்றனர்.
டென்மார்க் இளவரசி மேரிக்கு வெள்ளியினால் வடிவமைக்கப்பட்ட மீனாகரி பறவை சிலையை பிரதமர் பரிசளித்தார். இது 500 ஆண்டுகள் பழமையான கலையாகும். உத்தர பிரதேசத்தின் வாரணாசியை சேர்ந்த கலைஞர்கள் மீனாகரி சிலைகளை வடிவமைத்து வருகின்றனர்.
பின்லாந்து பிரதமர் சனா மேரினுக்கு பிரதமர் மோடி, பித்தளையில் வடிவமைக்கப்பட்ட மரத்தை பரிசாக அளித்தார். இவ்வகை கலைபொருட்களை ராஜஸ்தான் கலைஞர்கள் உருவாக்கி வருகின்றனர்.
சுவீடன் பிரதமர் மகதலேனா ஆண்டர்சனுக்கு காஷ்மீரின் பஷ்மினா சால்வையை பிரதமர் மோடி பரிசளித்தார். இமயமலைப் பகுதிகளைச் சேர்ந்த ஆடுகளிடம் இருந்து பெறப்படும் சிறப்பு ரோமங்கள் மூலம் இந்த சால்வைகள் நெய்யப்படுகின்றன. இவை உலக பிரசித்தி பெற்றவை.
டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரட்ரிக்சென்னுக்கு சுவரில் பொருத்தும் கட்ச் கைவினை கலைப்பொருளை இந்திய பிரதமர் பரிசளித்தார். குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த பழங்குடி கைவினைஞர்கள், துணியில் அழகிய கைவேலைப்பாடுகளுடன் இதனை தயாரிக்கின்றனர்.
நார்வே பிரதமர் ஜோனாஸுக்கு பிரதமர் மோடி, அழகிய கேடயத்தை பரிசாக அளித்தார். இதை ராஜஸ்தான் கலைஞர்கள் உருவாக்குகின்றனர். கேடயத்தின் மீது வெள்ளி, தங்க இழைகள் மூலம் அழகிய கை வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT