Published : 29 May 2016 12:13 PM
Last Updated : 29 May 2016 12:13 PM

ரூ.14 லட்சத்தில் எடை குறைப்பு சிகிச்சை: மனைவியை விவாகரத்து செய்தார் கணவர்

சவுதி அரேபியாவில் கணவரை திருப்திபடுத்துவதற்காக, பல லட்சம் ரூபாய் செலவழித்து, உடல் எடையை குறைத்த மனைவிக்கு விவாகரத்து பரிசாக கிடைத்துள்ளது.

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அதிக உடல் எடை கொண்ட ஆசிரியை ஒருவர் கணவருடன் வாழ்ந்து வந்தார். மனைவி குண்டாக இருப்பதாக, கணவர் அடிக்கடி குறைபட்டுக் கொண்டிருந்தார். எடை குறைத்து, ஒல்லியாக வேண்டும் என, மனைவியிடமே தனது ஆசையை பலமுறை வெளிப்படுத்திவந்தார்.

இந்நிலையில் பணியிட மாற்றம் காரணமாக, கணவர் வெளியூரில் தங்கியிருந்தார். அந்த சமயத்தில், உடல் எடையை குறைப்பதற்காக மனைவி மருத்துவமனை ஒன்றை அணுகினார். மருத்துவர்கள் வழங் கிய ஆலோசனைப்படி, அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

கணவர் ஊர் திரும்பியதும், மனைவியை பார்த்து, ஆனந்த அதிர்ச்சி அடைந்தார். மனைவியின் தோற்றத்தைக் கண்டு பூரித்துப் போன அவர், அறுவைசிகிச்சைக்கு செலவான தொகை குறித்து விவரம் கேட்டார்.

உடல் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சைக்கு, 80 ஆயிரம் ரியால் (ரூ.14 லட்சத்து 29 ஆயிரம்) செலவானதாக மனைவி கூறியதும், கணவரின் சந்தோஷம் மாயமானது. வீடு வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை, உடல் எடை குறைப்புக்கு செலவழித்த மனைவியை வெறுக்கத் தொடங்கினார்.

மனைவியை திரும்பியும் பார்க் காமல், பல இரவுகளை தனிமை யிலேயே கழித்த கணவர், ஒரு கட்டத்தில் விவாகரத்தும் செய்து விட்டார். இதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதும், ஏராளமான ‘நெட்டிசன்’கள் மனைவிக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருகின்றனர்.

கணவரின் அன்பை மட்டுமே முக்கியமாக கருதிய மனைவியை நிராகரித்தது தவறு என்றும், ‘இழந்த பணத்தை ஈடுசெய்யலாம்; ஆனால், மனைவியின் அன்புக்கு வேறெதுவும் ஈடாக முடியாது’ என்றும், சமூக வலைதளங்களில் அறிவுரைகள் குவிகின்றன.

சவுதி அரேபியாவில் அண்மைக் காலமாக விவாகரத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சவுதியில் ஐந்தில் ஒரு பங்கு திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில், 80 சதவீதம் விவாகரத்து, திருமணமான முதல் ஆண்டிலேயே நிகழ்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x