Published : 04 May 2022 07:07 AM
Last Updated : 04 May 2022 07:07 AM
இஸ்லாமாபாத்: உலக பத்திரிகை சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாகிஸ்தான் செய்தியாளர்கள் கூட்டமைப்பு (பிஎப்யுஜே) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சர்வதேச செய்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆய்வறிக்கையின்படி செய்தியாளர்களுக்கு அநீதி இழைப்பதில் பாகிஸ்தான் 5-வது இடத்தில் உள்ளது. கடந்த 1990முதல் 2020-ம் ஆண்டு வரை பாகிஸ்தானில் 138 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உண்மையை எடுத்துரைக்கும் செய்தியாளர்கள் தாக்கப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர்.
முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் ஊடக துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. செய்தியாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். பாகிஸ்தானில் பதவியேற்றிருக்கும் புதிய அரசு பத்திரிகை சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும். செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் டிஜிட்டல் ஊடக துறையின் மூத்த செய்தியாளர் இக்பால் கூறியதாவது:
பாகிஸ்தானின் 4 மாகாணங்களிலும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பல்திஸ்தான் பகுதிகளில் ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக உள்ளது. அங்கு செய்தியாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. பெண் செய்தியாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
கடந்த 1990 முதல் 2020 வரையிலான காலத்தில் 138 செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டதாக அரசு புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுஉண்மையில்லை. இந்த காலகட்டத்தில் 2,658 செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் முழுவதும் அச்சு, மின்னணு ஊடகங்களுக்கு பல்வேறு வகைகளில் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. குறிப்பாக டிஜிட்டல் ஊடக துறை மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT