Published : 30 Apr 2022 05:10 AM
Last Updated : 30 Apr 2022 05:10 AM
கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச, அவரது மூத்த சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலகக் கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.
அரசுக்கு எதிராக 1,000 தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று முன்தினம் முழுஅடைப்பு போராட்டம் நடத்தின. அதிபர் கோத்தபயராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்சபதவி விலக வேண்டும். இல்லையெனில் மே 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த சூழலில் இலங்கை அதிபர்கோத்தபய ராஜபக்ச கொழும்பில் நேற்று 11 கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முன்னாள் அதிபரும்லங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனா பங்கேற்றார். கூட்டத்துக்குப் பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது, "பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி நீக்கம் செய்ய அதிபர் கோத்தபய ராஜபக்ச ஒப்புக் கொண்டுள்ளார். பிரதமர் பதவி விலகியதும் அனைத்து கட்சிகள் அடங்கிய குழு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும்" என்று தெரிவித்தார்.
இதனை ஆளும் இலங்கை பொதுமக்கள் முன்னணி கட்சி வட்டாரங்கள் மறுத்துள்ளன. அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக 117 எம்.பி.க்கள் உள்ளனர். இரு தலைவர்களும் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளது. இதனால் குழப்பம் நீடிக்கிறது.
இந்தியா உதவி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உணவு பொருட்கள், எரிபொருட் களை இந்தியா அனுப்பி வருகிறது.தற்போது இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 760 கிலோ எடையளவில், 107 வகையான உயிர் காக்கும் மருந்துகளை இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் கரியால் நேற்று கொண்டு சென்றது. இந்த கப்பல் நேற்று கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது. மருந்து பொருட்கள், இலங்கை கடற்படை துணைத்தளபதி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா மற்றும் இலங்கை சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டன. இலங்கைக்கு அரிசி, எரிபொருள் ஆகியவற்றை அனுப்பி உதவிய இந்தியா,தற்போது மருந்து பொருட்களை யும் அனுப்பியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT