Published : 04 May 2016 04:23 PM
Last Updated : 04 May 2016 04:23 PM

அமெரிக்க தேர்தல்: குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆகிறார் டோனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டோனால்டு டிரம்ப் தேர்வாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இவருக்குப் போட்டியாக களமிறங்கிய டெட் குரூஸ் போட்டியிலிருந்து விலகினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இண்டியானா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் டோனால்டு அமோக வெற்றி பெற டெட் குரூஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். இதனையடுத்து தான் இனி போட்டியில் தொடர விரும்பவில்லை என்று விலகியதை அடுத்து டோனால்டு டிரம்ப்தான் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்பது ஏறக்குறைய முடிவான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

10 மாதங்களுக்கு முன்பாக அரசியல் முகம் காட்டத் தொடங்கிய டோனாட்டு டிரம்ப் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க தேசியவாதத்தை பல்வேறு சர்ச்சைக்குரிய விதங்களில் இவர் பிரதிநிதித்துவம் செய்து வருகிறார். அமெரிக்க ஜனநாயகம் போற்றும் பல மதிப்பு மிக்க நடைமுறைகளை இவர் கடுமையாகக் கேள்விக்குட்படுத்தி வருவதோடு, அமெரிக்க இளைஞர்களின் அதிருப்தியில் குளிர்காயும் நோக்கங்களுடன் கடுமையான் சர்ச்சைகளுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் போட்டி வேட்பாளர் டெட் குரூஸின் தந்தையைப் பற்றி டோனால்டு டிரம்ப் அவதூறாகப் பேசியதை அடுத்து இருவரது பிரச்சாரமும் அரசியல் நாகரிகம் என்ற எல்லைகளைக் கடந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெட் குரூஸின் தந்தையை ஜான் கென்னடி கொலையுடன் தொடர்பு படுத்தினார் டிரம்ப், டெட் குரூஸ் இதற்குப் பதிலடியாக, “நோய்க்கூறு மிக்க பொய்யர்” டிரம்ப் என்று பதிலடி கொடுத்தார். இதனையடுத்து சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

ஆனால் கடைசியில் டெட் குரூஸை, டிரம்ப் பாராட்டிப் பேசினார். அதாவது தனக்கு சரியான போட்டியை ஏற்படுத்திய கடினமான போட்டியாளர் என்றும் அவருக்கு நல்ல எதிர்காலம் அமையும் என்றும் பாராட்டினார்.

இந்நிலையில் குடியரசுக் கட்சியின் தேசிய கமிட்டி சேர்மன் ரெய்ன்ஸ் பிரைபஸ், டோனால்டு டிரம்ப் உத்தேச அதிபர் வேட்பாளர் என்று கூறியதோடு, ஹிலாரி கிளிண்டனை வீழ்த்த அனைவரும் ஒன்று படுவோம் என்றார்.

ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் இண்டியானா மாகாணத்தில் போட்டி அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தார்.

எனினும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி மீதே தங்கள் தாக்குதல் தொடரும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x