Published : 25 Apr 2022 08:48 AM
Last Updated : 25 Apr 2022 08:48 AM

பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு: தீவிர வலதுசாரியை வீழ்த்தினார்

இமானுவேல் மேக்ரான்

பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடத்தப்படுவது வழக்கம். இதில், அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 12 பேர் போட்டியிட்டனர்.

முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50%க்கும் மேல் வாக்குகளைப் பெறாத நிலையில் முதல் இரு இடங்களைப் பெறுவோர் இடையே இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று (ஏப். 24-ம் தேதி) நடந்தது. இத்தேர்தலுக்காக புதுச்சேரி, தமிழகம், கேரளத்தில் 4,564 பேர் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற வாக்காளர்களும் ஏற்கெனவே வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய 2 ஆம் சுற்று தேர்தலில் மேக்ரான் 58% வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தீவிர வலதுசாரியான லீ பென் 42% வாக்குகளும் பெற்றனர்.

பிரான்ஸ் அதிபர் தேர்தல் வரலாற்றில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக அதிபர் பதவியை பிடித்த பெருமையைப் பெற்றுள்ளார் மேக்ரான். இமானுவேல் மேக்ரான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். அவருடைய புதிய பதவிக்காலம் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும்.

இந்நிலையில் தேர்தல் வெற்றி குறித்து உரையாற்றிய இமானுவேல் மேக்ரான், "தேர்தலில் எனக்குப் பலரும் வாக்களித்தது அவர்கள் எனது கருத்துக்களை ஆதரிப்பதால் அல்ல, தீவிர வலதுசாரிகளின் கருத்துகளை ஒதுக்கி வைப்பதற்காகவே. நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், நான் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன" என்று கூறினார்.

இதுவும் வெற்றிதான்.. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பேசிய 53 வயதான லீ பென், "நான் எனது அரசியல் பயணத்தை கைவிடப் போவதில்லை. 42% வாக்குகள் பெற்றுள்ளேன். இதுவுமே ஒரு வெற்றி தான். நாங்கள் முன்வைத்த கருத்துகள் புதிய உச்சங்களை தொட்டுள்ளன என்பதன் அடையாளம்" என்றார்.

போராட்டம், கண்ணீர் புகைகுண்டு.. இதற்கிடையில், இமானுவேல் மேக்ரானின் வெற்றியை எதிர்த்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் மீது அதிரடிப்படை போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தலில் மேக்ரான் 52 சதவீதம் என்றளவில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தாலும் கூட இத்தேர்தலில் வாக்களிப்பை புறக்கணித்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x