Last Updated : 23 May, 2016 02:34 PM

 

Published : 23 May 2016 02:34 PM
Last Updated : 23 May 2016 02:34 PM

தாய்லாந்து பள்ளி விடுதியில் தீ விபத்து: 17 மாணவிகள் பலி

தாய்லாந்து நாட்டில் தனியார் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 சிறுமிகள் பலியாகினர். பலரை காணவில்லை.

இந்த சம்பவம் குறித்து தாய்லாந்து நாட்டு போலீஸ் தரப்பில், "தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் சியாங் ராய் மாகாணத்தில் உள்ளது பித்தகிராட் வித்தாயா எனும் தனியார் பள்ளிக்கூடம்.

இந்தப் பள்ளிக் கூடத்தின் விடுதியில் 38 மாணவிகள் தங்கியுள்ளனர். அனைவருமே அருகில் உள்ள மலைப்பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியினக் குழந்தைகள். நேற்றிரவு விடுதியில் திடீரென தீப்பிடித்தது. தீ விபத்து ஏற்பட்டபோது மாணவிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அதனால் விபத்தில் சிக்கி 17 சிறுமிகள் பரிதாபமாக பலியாகினர். பலரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியிருக்கிறது. சடலங்கள் கைப்பற்றப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தீ விபத்தில் பலியான சிறுமிகள் 5 முதல் 12 வயது வரம்பில் அடங்குவர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறைபாடுகளால் இதுபோன்ற விபத்து பொது இடங்களில் அடிக்கடி நடைபெறுவது தொடர்கதையாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x