இலங்கைக்கு மேலும் 50 கோடி டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புதல்

இலங்கைக்கு மேலும் 50 கோடி டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புதல்
Updated on
1 min read

கொழும்பு: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக மேலும் 50 கோடி டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைக்கு உடனடியாக 400 கோடி டாலர் தேவைப்படுகிறது. இதையடுத்து, நிதியமைச்சர் அலி சாப்ரி உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடி உள்ளார். இப்போது அமெரிக்கா சென்றுள்ள சாப்ரி, சர்வதேச செலாவணி நிதியத்துடன் (ஐஎம்எஃப்) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதுதவிர, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடமும் நிதியுதவி கோரி வருகிறார்.

இலங்கையின் கோரிக்கையை ஏற்று, இந்திய அரசு ஏற்கெனவே 190 கோடி டாலர் கடன் வழங்கியது. இதை எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருளாக அனுப்பி வைத்தது. குறிப்பாக 40 ஆயிரம் டன் அரிசியை வழங்கியது. எனினும், சர்வதேச அமைப்புகள் கடன் வழங்கும் வரை எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு நிதியுதவி வழங்குமாறு இந்தியாவை இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக மேலும் 50 கோடி டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கை நிதியமைச்சர் அலி சாப்ரி நேற்று முன்தினம் தெரிவித்தார். மேலும் 100 கோடி டாலர் கடன் வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை இந்தியா பரிசீலிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in