Published : 23 Apr 2022 08:52 AM
Last Updated : 23 Apr 2022 08:52 AM

உச்சம் தொட்ட போர்: புதின், ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர்

ஜெனீவா: ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரேஸ் அடுத்த வாரம் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களை அவரவர் நாட்டில் சந்திக்கிறார்.

வரும் செவ்வாய்க்கிழமையன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், வெள்ளிக்கிழமையன்று உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியையும் வெளியுறவு அமைச்சர் குலேபாவையும் அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்பை ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்த சந்திப்புகளை சாத்தியமாக்க வேண்டும் என்று ரஷ்யா, உக்ரைனுக்கு ஐ.நா. சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதலால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா நாடுகள் மத்தியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காரணம், ரஷ்ய தாக்குதல் மேற்கத்திய அத்துமீறலுக்கு எதிரானது என்று கூறி சீனா ஒதுங்கிவிட்டது. கவுன்சிலில் உள்ள மற்ற மூன்று நாடுகளும் ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. இவ்வாறாக பாதுகாப்பு கவுன்சிலில் பூசல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சு வார்த்தையை தொடங்கிவைப்பதற்காகவே இந்தப் பயணத்தை பொதுச் செயலாளர் மேற்கொள்வதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

"மிகப்பெரிய அழிவுகளும், விளைவுகளும் ஏற்பட்டுள்ள நிலையில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்க பொதுச் செயலாளர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து ஒரே ஒரு முறை மார்ச் 26 ஆம் தேதி மட்டுமே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடன் ஐ.நா பொதுச் செயலாளர் தொலைபேசியில் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x