ஆப்கன் தொடர் குண்டு வெடிப்பில் 30 பேர் பலியான சம்பவம்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு
காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த 3 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 30க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி, அந்நாட்டின் ஆட்சியை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதிலிருந்து அங்கு குண்டு வெடிப்புகள், தற்கொலைப் படை தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் நேற்று (ஏப்.21) நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் மசார்- இ- ஷெரிஃப் நகரத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதி ஒன்றில் தொழுகை வேளையில் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர். மசூதி குண்டு வெடிப்புடன் சேர்த்து ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை மட்டும் 3 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
குண்டுஸ் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 4 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர். கால்ச் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 10க்கும் அதிகமானோர் பலியாகினர். நேற்று மட்டும் 30-க்கும் அதிகமானோர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியாகி உள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் தங்கள் இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, மேற்கு காபூலில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் ஆப்கனில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
