Published : 22 Apr 2022 09:34 AM
Last Updated : 22 Apr 2022 09:34 AM

பிரச்சினைகளுக்கு மத்தியில் கடிதங்களை பரிமாறிக் கொண்ட கொரிய அதிபர்கள்

பியாங்யாங்: வட கொரியா, தென் கொரியா இடையேயான பிரச்சினைகளுக்கு இடையே இருநாட்டுத் தலைவர்களும் கடிதங்களைப் பரிமாறிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கொரிய தீபகற்பத்தின் அரிய அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் பதவிக்காலம் முடிகிறது. இதனையொட்டி அதிபர் பதவியிலிருந்து விடைபெறும் அவர் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதனை வட கொரிய அரசு ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் எழுதியுள்ள கடிதத்தில், "2018ல் நடந்த உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது போல் வட கொரியா, தென் கொரியா இணைப்புக்கான அடித்தளம் அமைப்பதற்கு தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவேன். மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வந்து இருதரப்பும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்ப வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்," இந்த கடிதப் பரிமாற்றம் பரஸ்பரம் நம்பிக்கையின் விளைவு. இருதரப்புமே இடையராது அமைதிக்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இது வரலாற்று சிறப்புமிக்க தருணமாகப் பார்க்கப்படுகிறது.

அண்மையில், "எங்கள் மீது ராணுவ பலத்தை தென் கொரியா பயன்படுத்தினால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரியும் அவரது கொள்கை ஆலோசகருமான கிம் ஜோ யாங்" எச்சரித்திருந்தார். இது கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்ட நிலையில் இந்த கடிதப் பரிமாற்றம் ஆறுதலாக வந்துள்ளது.

1948-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி வடகொரியா தனி நாடாக உருவானது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் 1948-ம் ஆண்டு முதல் வடகொரியா ஆளப்பட்டு வருகிறது.

ஒரு தாய் மக்களுக்குள் நடக்கும் மோதல்.. ஒரே மொழி, ஒரே இனத்தைக் கொண்ட இரு கொரிய நாடுகளுக்கு இடையே என்னதான் பிரச்சினை என்று வரலாற்றுப் பக்கங்களைத் தேடினால் இரண்டாம் உலகப் போரில் இருந்து கதை வருகிறது. அப்போது, ஒன்றுபட்ட கொரியாவை ஜப்பான் தனது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பின்னர், 1945-ல் கொரியா விடுதலை பெற்றது.

கொரியா விடுதலை பெற்ற வேளையில் அதன் வட பகுதியில் சோவியத் நாடும், தென் பகுதியில் அமெரிக்காவும் ஆதிக்கத்தைச் செலுத்தின. இரு ஆதிக்க நாடுகள் இடையிலான பனிப்போர், கொரியாவில் பெரும் சண்டையாக வெடித்தது. ஐந்தே ஆண்டுகளில் மீண்டும் போரை சந்தித்தது ஒன்றுபட்ட கொரியா. 1950ல் தொடங்கிய கொரியப் போர் மூன்று வருடங்கள் நீடித்தது.

1953-ல் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டு நாடுகள் உருவாகின. போர் நிறுத்தத்தின்போது எந்த அமைதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை. அப்போதிலிருந்தே இரு நாடுகள் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது. இன்றும் தென் கொரியாவில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கே அமெரிக்கப் படைகள் இருக்கின்றன. வட கொரியாவுக்கு அமெரிக்கா என்றாலே வெறுப்பு. அந்த வெறுப்பு தென் கொரியா மீதும் பாய்ந்து கொண்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x