Published : 21 Apr 2022 01:57 PM
Last Updated : 21 Apr 2022 01:57 PM

உக்ரைனின் மரியுபோலை கைப்பற்றிய ரஷ்யா: வெற்றி முழக்கமிட்ட விளாடிமிர் புதின்

மாஸ்கோ: உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "உக்ரைனிடமிருந்து மரியுபோலை விடுவித்துவிட்டோம். வீரர்களுக்கு பாராட்டுகள். மரியுபோலின் மிகப் பெரிய இரும்பு ஆலையைக் கைப்பற்றுங்கள்" என்று கூறியுள்ளார்.

மேலும், அசோவ் கடற்கரையில் உள்ள மரியுபோலில் இப்போது வெறும் 1000 உக்ரைனிய வீரர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் அங்குள்ள மிகப் பெரிய இரும்பு ஆலையில் தஞ்சமடைந்திருப்பதாகவும் ரஷ்யப் படைகள் தெரிவித்துள்ளன. முதலில், அந்த ஆலையை தகர்க்க உத்தரவு வந்ததாகவும், ஆனால் தற்போது அதிபர் புதின் ஆலையை சுற்றிவளைத்து ஈ கூட வெளியே செல்லாத வகையில் சீல் வைக்கச் சொல்லியிருப்பதாக ரஷ்ய படைகளின் கிழக்கு கமாண்டர் தெரிவித்துள்ளார்.

8 வாரங்களாக நடக்கும் போர்... கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அதிபர் புதின் அறிவித்தார். நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் மீதான உக்ரைனின் ஆர்வம் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், நாசி ஆதரவு ஆட்சியை அப்புறப்படுத்தவே ராணுவ நடவடிக்கை என்று கூறினார். முதல் நாளிலேயே ரஷ்யப் படைகள் வெகு வேகமாக முன்னேறியதால் ஓரிரு வாரங்களில் போர் முடிந்துவிடும், தலைநகர் கீவ் வீழ்ந்துவிடும் என்று கணிப்புகள் வெளியாகின.

ஆனால், தங்களை ஐரோப்பிய ஒன்றியத்தில், நேட்டோவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கைகளை அந்த அமைப்புகள் புறக்கணித்தாலும் கூட அதிபர் ஜெலன்ஸிகிக்கு இன்றளவும் ராணுவ உதவிகளைக் குவித்து வருகின்றன. அண்டை நாடான போலந்து, உக்ரைனில் இருந்து எத்தனை லட்சம் பேர் வந்தாலும் கூட இன்முகத்துடன் அகதிகளை ஏற்று ஆதரவு கொடுக்கிறது. பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன், உக்ரைனுக்கு நேரில் சென்று கீவ் நகரில் வலம் வந்து சர்வதேச கவனத்தை ஈர்த்தார். நேட்டோவில் உள்ள உறுப்பு நாடுகள் முக்கியமாக அமெரிக்கா, பிரிட்டனின் ஆதரவோடு ஜெலன்ஸ்கி போரை இன்றளவும் எதிர்கொண்டு வருகிறார்.

இலக்கை மாற்றிய ரஷ்யா... இந்நிலையில்தான் ரஷ்யப் படைகள் போர் உத்தியை மாற்றி கிழக்கு நோக்கி நகர்ந்தது. உக்ரைனின் கிழக்குப் பகுதியான் டான்பாஸ் எப்போதுமே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களைக் கொண்ட பகுதிதான். டானட்ஸ்க், லுஹான்ஸ்க் நகரங்கள் தான் தங்களின் குறி என்று ஆரம்பத்தில் ரஷ்யா கூறியிருந்தது. இப்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் க்ரிமீயாவை ஒட்டிய க்ரெமின்னா, டானட்ஸ்க், லுஹான்ஸ்கா தற்போது மரியுபோல் என்ற மிகப்பெரிய துறைமுக நகரம் ஆகியன வந்துள்ளன.

முன்னதாக நேற்று மரியுபோலில் இருந்து பாதுகாப்பான மனிதாபிமான தடம் வழியாக 4 பேருந்துகளில் மக்கள் வெளியேறினர். பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள், வயதானோர் வெளியேறினர். இருப்பினும் அந்நகரில் இன்னும் 1 லட்சம் பேர் சிக்கியிருப்பதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மரியுபோலை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் குற்றச்சாட்டு... இதற்கிடையில் உக்ரைனில் சரணடைந்த தங்கள் நாட்டு வீரர்களைக் கூட ரஷ்யப் படைகள் கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் மரியுபோலில் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அணுசக்தி ஏவுகணை சோதனை: கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சர்மாட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அணுசக்தி ஏவுகணை, வடமேற்கு ரஷ்யாவில் இருந்து சோதனை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 6,000 கிமீ (3,700 மைல்கள்) தொலைவில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள இலக்குகளை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதிபர் புதி, "சர்மாட் அணுசக்தி ஏவுகணை அதி நவீன தொழில்நுட்ப திறன் கொண்டது. சர்மாட்டை எந்த ஒரு ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளும் ஒன்றும் செய்ய முடியாது. நவீன வழிமுறைகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட சர்மாட் ஏவுகணைக்கு இதுவரை உலகிலேயே ஈடு இணை இல்லை. இனியும் வரப்போவதுமில்லை" என்று கூறியிருந்தார்.

ரஷ்யாவின் இந்த அணுசக்தி ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x