Published : 21 Apr 2022 10:42 AM
Last Updated : 21 Apr 2022 10:42 AM

தெருவுக்கு போரிஸ் ஜான்சனின் பெயர்: ரஷ்ய அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் உக்ரைன்

கீவ்: உக்ரைனின் துறைமுக நகரான ஒடேசாவில் உள்ள ஒரு தெருவுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெயரை சூட்ட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்ப்பதில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கியப் பங்காற்றுகிறார். ரஷ்யாவுக்கு எதிராக நிறைய தடைகளை விதித்துள்ளார். அதனால் மேயாகோவ்ஸ்கி தெருவை போரிஸ் ஜான்சன் தெரு என்று பெயர் மாற்றியுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயாகோவ்ஸ்கி என்ற தெருப் பெயர் விளாடிமிர் மாயகோவ்ஸ்கி என்ற புகழ்பெற்ற ரஷ்ய கவிஞரின் நினைவாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு இதுவரை 450 மில்லியன் பவுண்ட் அளவில் ராணுவ உதவிகளையும், 400 மில்லியன் பவுண்ட் அளவில் பொருளாதார, மனிதாபிமான உதவிகளையும் பிரிட்டன் செய்துள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய மொழி பேசுபவர்களே அதிகம். அதனால் அங்குள்ள தெருக்களுக்கு ரஷ்ய மொழிப் பெயர்களே இருந்தது. இந்நிலையில் நாட்டில் ரஷ்ய மொழி ஒழிப்பை உக்ரைன் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஊர், தெரு பெயர்களில் ரஷ்ய ஆதிக்கம் இல்லாமல் எல்லாம் உக்ரைனிய மொழிக்கு மாற்றப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அந்த வரிசையிலேயே தெருவுக்கு போரிஸ் ஜான்சன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உக்ரைன் சென்ற போரிஸ் ஜான்சன்: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு சென்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்நாட்டு அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியுடன் நகர்வலம் வந்து மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய தாக்குதல் கட்டற்று சென்று கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, போலந்து எனப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் தங்களின் உதவிகளை, ஆதரவை, நட்புக்கரத்தை நீட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் உக்ரைன் சென்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிக் கொண்டே அதிபர் மாளிகையிலிருந்து சிறிது தூரம் நடந்தே சென்று நகரத்தைப் பார்வையிட்டார். கீவ் நகரவாசி ஒருவரிடம் ஆறுதல் கூறியதோ உக்ரைனுக்காக இங்கிலாந்து எப்போதும் தோள் கொடுக்கும் என்றார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், உக்ரைன் நகருக்கு போரிஸ் ஜான்சனின் பெயர் சூட்டப்படுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x