Published : 21 Apr 2022 08:56 AM
Last Updated : 21 Apr 2022 08:56 AM
காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியமைந்தது. தலிபான் ஆட்சியை இன்னும் சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை. காரணம் தலிபான்கள் பெண் கல்விக்கு தடை, பெண்கள் பணியில் இருக்கத் தடை என பழைய நடைமுறையில் இருந்து தன்னை சற்றும் மாற்றிக் கொள்ளவில்லை. இந்நிலையில், மது அருந்தியதாகவும், மது விற்றதாகவும் கைதான 7 பேருக்கு தலிபான்கள் கசையடி தண்டனை கொடுத்துள்ளனர்.
முன்னதாக தலிபான்கள் 1996 முதல் 2001 வரை ஆட்சியில் இருந்தபோதும் இதுபோன்ற கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. ஆண் துணை இல்லாமல் வெளியே வரும் பெண்கள் தாக்கப்பட்டனர். உச்சபட்சமாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஆண் துணை இல்லாமல் வெளியே வந்ததற்காக கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தலிபான் ஸ்டைல் தண்டனைகள் ஆப்கனில் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
7 பேருக்கு 35 கசையடி: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் ஷாரியத் சட்டப்படியே ஆட்சி அமையும், எங்களை இஸ்லாமிக் எமிரேட் என்று அழையுங்கள் என்றனர். அதன்படி ஆப்கனில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் முதன் முறையாக உச்ச நீதிமன்றம் ஷாரியத் சட்டப்படி தண்டனை வழங்கியுள்ளது.
மது விற்பனை செய்ததாக, மது அருந்தியதாக கைதான 7 பேருக்கு தலா 35 கசையடி வழங்கப்பட்டது. இவர்களில் 5 பேருக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. கசையடி தண்டனை மக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிகிறது.
கைகளை துண்டிப்பது, திருடினால் பாதங்களை வெட்டுவது, பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் அவர்களை கல்வீசி கொல்வது போன்ற கொடூரமான தண்டனைகள் தலிபான் பட்டியலில் உள்ளது. ஆப்கனில் ஆட்சியமைத்த 8 மாதங்களில் தலிபான்கள் பெண்களின் கல்வி, பணி உரிமையைப் பறித்ததைத் தவிர ஆக்கபூர்வமாக வேறேதும் செய்யவில்லை என்பது மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில் இந்த கசையடி சம்பவம் பரவலாக கண்டனங்களைப் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT