Published : 04 May 2016 10:07 AM
Last Updated : 04 May 2016 10:07 AM

உலக மசாலா: பாதி குளத்திலும் பாதி நிலத்திலும் இருக்கும் வீடு!

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் பால் பிலிப்ஸ் வித்தியாசமான வீட்டைக் கட்டியிருக்கிறார். பாதி வீடு நிலத்திலும், பாதி வீடு குளத்திலும் இருக்குமாறு கட்டியிருக்கிறார். ‘‘மீன் பிடிப்பது என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு. வீட்டுக்குள் அமர்ந்துகொண்டே மீன் பிடிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. ஒருமுறை ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, என்னை மீன் பிடிக்க விடாமல் தடுத்தனர். அதனால் சொந்தமாக ஒரு குளம் உருவாக்கி, மீன் பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நிலத்தை வாங்கி, 2014-ம் ஆண்டு வேலையை ஆரம்பித்தேன். 1850 சதுர அடியில் வீட்டைக் கட்டி முடித்தேன்.

பாதி குளத்திலும் பாதி நிலத்திலும் இருக்கும் வீடு விரைவில் பிரபலமாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் செய்தி வந்தவுடன் உலகம் முழுவதும் தெரிந்துவிட்டது. என் வீட்டிலிருந்து குளத்தில் இறங்கி மீன் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டுக்குள் தரையில் இருக்கும் ஒரு கதவைத் திறந்தால் கீழே குளம். வசதியாக அமர்ந்துகொண்டு வெயில், மழை பற்றிக் கவலைப்படாமல் மீன் பிடிக்கலாம். தினமும் ஏராளமான மீன்களைப் பிடித்து வருகிறேன்’’ என்கிறார் பிலிப்ஸ்.

நிலத்தில் பாதி, குளத்தில் மீதி!

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் வசிக்கும் மேரி பெல் ரோச், மேபெல் பாவெல் என்ற இரட்டையர்கள் 100-வது பிறந்தநாளைக் கொண்டாடி முடித்திருக்கிறார்கள்! சகோதரிகள் இருவரையும் ‘வாலெஸ் ட்வின்ஸ்’ என்று அழைக்கிறார்கள். பிறந்ததில் இருந்து இதுவரை இருவரும் தனித்தனியாக வசித்ததே இல்லை. அதாவது நூறு ஆண்டுகளையும் ஒன்றாகவே கழித்திருக்கிறார்கள்.

‘‘நாங்கள் இருவரும் உருவத்தில் மட்டுமல்ல, ஒரே மாதிரி ஆடைகளை அணிந்துகொள்வோம். தலை அலங்காரம் செய்துகொள்வோம். எங்கள் வீட்டில் மிகுந்த பொருளாதார நெருக்கடி. ஆனாலும் கல்லூரியில் மிகக் குறைந்த கட்டணத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்குப் பிடித்த பாடத்தை மட்டுமே வகுப்பில் இருந்து கவனிப்பேன். அதே போல மேபெல் அவளுக்குப் பிடித்த பாடத்தைக் கவனிப்பாள். இருவரின் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, சாதுரியமாகத் தப்பித்துக்கொள்வோம். எங்கள் இருவருக்குமே ஆசிரியர் பணி மீது ஆர்வம் இருந்தது. பள்ளி ஆசிரியராக வேலை செய்தோம். சின்ன வயதில் இருந்தே நண்பர்களான இருவரைத் திருமணம் செய்துகொண்டோம். இரண்டாம் உலகப் போருக்குக் எங்கள் கணவர்கள் சென்றார்கள். தேவாலயத்தில் இருந்தபோது பியர்ல் ஹார்பரில் குண்டு வெடித்தது அறிந்து அதிர்ந்து போனோம்.

போருக்குப் பிறகு கணவர்கள் பத்திரமாகத் திரும்பினர். மோட்டார் சைக்கிள்களில் சுற்றுவதே எங்களின் முக்கியமான பொழுதுபோக்கு. காலம் சென்றது. கணவர்கள் இறந்து போனார்கள். நானும் மேபெலும் எங்கள் பூர்விக வீட்டுக்குக் குடி வந்தோம். தினமும் 30 நிமிடங்கள் நடப்போம். இன்றும் ஆடை, அலங்காரம் எல்லாம் ஒரே மாதிரிதான் செய்துகொள்கிறோம். சிகரெட், மது தொட்டதில்லை. மற்றபடி எங்களின் நீண்ட ஆயுளுக்கு எங்களின் மரபணுக்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் அம்மா 97 வயது வரை வாழ்ந்தார். நாங்கள் நூறைக் கடந்துவிட்டோம். ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் எங்கள் வாழ்க்கை முடிந்தால் சந்தோஷம்’’ என்கிறார் மேரி.

செஞ்சுரியைத் தாண்டிய இரட்டையர்கள் வாழ்க!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x