ஆப்கனில் பள்ளி வளாகம் அருகே குண்டு வெடிப்பு: 6 பேர் பலி; பலர் படுகாயம்

ஆப்கனில் பள்ளி வளாகம் அருகே குண்டு வெடிப்பு: 6 பேர் பலி; பலர் படுகாயம்

Published on

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பள்ளிக்கூட வளாகத்தின் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாகினர். 7 குழந்தைகள் உள்பட பலர் படுகாயமடைந்தனர்.

மேற்கு காபூலில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி வளாகத்தின் அருகே அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன. இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

இந்தப் பகுதியில் வசிப்போரில் பெரும்பாலானோர் ஷியா ஹசாரா பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆப்கனின் மத சிறுபான்மையினத்தவராக கருதப்படுகிறார்கள். சன்னி பிரிவினர் இவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவது ஆண்டாண்டு காலமாகவே நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று காலை மேற்கு காபூலில் உள்ள அப்துல் ரஹீம் சாஹித் உயர்நிலைப் பள்ளி வளாகத்தின் அருகே அடுத்தடுத்த 3 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதனையடுத்து அப்பகுதியில் தலிபான் படைகள் சுற்றிவளைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஆப்கனில் உள்ள ஷியா முஸ்லிம்கள் மீது ஐஎஸ்-ஐஎல் அமைப்பினரும் அவ்வப்போது தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேறின. அதன்பின்னர் அங்கு தலிபான்கள் ஆட்சி அமைந்தது. இதுவரை பெண் கல்வியை தலிபான்கள் அங்கீகரிக்கவில்லை. உலக நாடுகள் கூறும் பல்வேறு வரையறைக்குள்ளும் வர தயக்கம் காட்டி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆப்கனின் டோலோ நியூஸ் சேனல், சம்பந்தப்பட்ட இடத்தின் வீடியோ காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அங்கு தலிபான்களின் இஸ்லாமிக் எமிரேட்ஸ் படையினர் ஆயுதங்களுடன் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பது பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் நிறைய குழந்தைகள் காயமுற்றுள்ளனர் அதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சுவதாக காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலீத் ஜர்தான் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in